ஹோட்டலில் செய்வது போலவே வீட்டிலும் ரொம்பவே சுலபமாக ஆனியன் மஞ்சூரியன் டேஸ்டியாக இப்படி செஞ்சு பாருங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

onion-manchurian0
- Advertisement -

வெங்காயம் கொண்டு செய்யப்படும் இந்த ஆனியன் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மஞ்சூரியன் என்றாலே நமக்கு காலிபிளவர் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த ஆனியன் மஞ்சுரியன் செய்வதற்கு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. அதிகம் செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்தமான இந்த ஆனியன் மஞ்சூரியன் இப்படியும் செய்து கொடுத்துப் பாருங்கள். சுவையான ஆனியன் மஞ்சூரியன் செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

ஆனியன் மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 3, மைதா மாவு – 3 ஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – முக்கால் ஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பூண்டு பல் – 5, பச்சை மிளகாய் – 1, டொமேட்டோ சாஸ் – 2 ஸ்பூன், சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

ஆனியன் மஞ்சூரியன் செய்முறை விளக்கம்:
ஆனியன் மஞ்சூரியன் செய்ய முதலில் மூன்று வெங்காயத்தை தோலுரித்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெங்காயத்தை மட்டும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். பொடி பொடியாக இருக்கும் வெங்காயத்தில் இருந்து ஒரு வெங்காயம் அளவிற்கு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் வெங்காயத்துடன் மைதா மாவு, அரிசி மாவு மற்றும் மிளகாய்த்தூள் உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாசத்திற்கு அரை ஸ்பூன் அளவிற்கு கரம் மசாலா சேர்த்து இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் போண்டா உருட்டுவது போல சிறு சிறு உருண்டைகளாக உருட்டுவதற்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து உருண்டை பிடியுங்கள். அதிகம் தண்ணீர் தெளித்தால் உருண்டைகள் பிரிந்து விடும். எனவே கொஞ்சமாக தெளித்து கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் உருண்டைகளை பொரித்து எடுக்கும் அளவிற்கு தேவையான எண்ணெய் சேர்த்து நன்கு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை மீடியமாக வைத்து கொண்டு ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு எல்லா பக்கமும் சிவக்க வறுத்து எடுங்கள். பின்னர் வேறொரு வாணலியில் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு காய விடுங்கள். நீங்கள் உருண்டைகள் பொரித்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். எண்ணெய் காய்ந்ததும் அதில் தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பூண்டு பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

மஞ்சூரியன் செய்வதற்கு பூண்டு, பச்சை மிளகாய் அவசியமாகும். பின்பு நீங்கள் மீதம் எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வறுபட்டதும் டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். சோயா சாஸ் எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் என்று கூற முடியாது எனவே இது இல்லாவிட்டால் பரவாயில்லை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பதிலாக கொஞ்சம் மிளகு தூள் தூவி கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து ஒருமுறை நன்கு கிண்டி விட்டு அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாறுங்கள், அருமையான ஹோட்டல் ஸ்டைல் ஆனியன் மஞ்சூரியன் ரெடி!

- Advertisement -