சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுரைக்காய் கிரேவி 10 நிமிடத்தில் இப்படி குக்கரில் 2 விசில் விட்டு எடுத்து பாருங்கள்! செம டேஸ்ட்டா இருக்கும்.

sorakkai-gravy1
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற எல்லாவற்றுக்குமே சூடாக சுரைக்காய் கிரேவி இப்படி வெச்சு கொடுத்தா யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்? சுவையாக இருக்க கூடிய இந்த சுரைக்காய் கிரேவி செய்வதற்கு ரொம்ப நேரம் கூட எடுக்காது. மிக்ஸியில் மசாலா அரைத்து, குக்கரில் 2 விசில் விட்டு எடுத்தால் சுரைக்காய் கிரேவி மணக்க மணக்க தயார்! ஆரோக்கியமான இந்த சுரைக்காய் கிரேவி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

சுரைக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
தனியா விதைகள் – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – இரண்டு துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – ஒன்று, சீரகம் சோம்பு, மிளகு – தலா முக்கால் டீஸ்பூன், வர மிளகாய் – 3, தேங்காய் துண்டுகள் – ஒரு கைப்பிடி, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி – 1, உப்பு – தேவையான அளவு, சுரைக்காய் – 350 கிராம், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

சுரைக்காய் கிரேவி செய்முறை விளக்கம்:
முதலில் சுரைக்காய் கிரேவி செய்வதற்கு ஒரு முழு சுரைக்காயை கழுவி சுத்தம் செய்து அதன் மேல் தோலை லேசாக சீவி எடுத்து விட்டு பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு மசாலா அரைக்க வேண்டும். அதற்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.

அதில் தனியா விதைகள், மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வர மிளகாய் ஆகியவற்றை மேலே கொடுத்துள்ள அளவின்படி சேர்த்து லேசாக வாசம் வர வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். 2 நிமிடம் நன்கு வதக்கிய பின்பு துருவி வைத்துள்ள தேங்காயை அல்லது நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து லேசாக சூடாக்கி அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி விடுங்கள். பின் ஒரு சிறு தக்காளியை மட்டும் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி மசிய வதங்கியதும் நீங்கள் வெட்டி வைத்துள்ள சுரைக்காய் துண்டுகளை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.

சுரைக்காய் லேசாக சுருள வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்க்க வேண்டும். மிக்ஸியை கழுவி அந்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள், கூடுதலாகத் தேவை இல்லாமல் தண்ணீர் சேர்க்க வேண்டாம். சுரைக்காய் நீர்க்காய் என்பதால் அதுவே தண்ணீர் விடும். பின்னர் மூடி போட்டு குக்கரில் 3 விசில் விட்டு எடுத்தால் மணக்க மணக்க சுடச்சுட கெட்டியான சுரைக்காய் கிரேவி ருசியாக இருக்கும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

- Advertisement -