இட்லி, சப்பாத்தி, இடியாப்பத்துக்கு கையேந்தி பவன் வெள்ளை குருமா 10 நிமிடத்தில் ருசியாக இப்படிக்கூட செய்யலாமே!

kuzhambu
- Advertisement -

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் என்று அனைத்து விதமான டிபன் வகைகளுக்கும் பக்காவான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த வெள்ளை குருமா பெரும்பாலான கையேந்தி பவன்களில் கொடுக்கப்படுகிறது. இதை நாமும் இதே முறையில் வீட்டில் எப்படி செய்வது? என்கிற ரகசியத்தை தெரிந்து கொள்வோம். வெள்ளையாக பார்ப்பதற்கே சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கும் தின்னத் தின்னத் திகட்டாத இந்த வெள்ளை குருமா நாமும் வீட்டிலேயே பத்து நிமிடத்தில் எளிதாக எப்படி செய்வது? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

thallu vandi

கையேந்தி பவன் வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க: சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பூண்டு பற்கள் – 5, இஞ்சி – ஒரு துண்டு, பட்டை – 2, கிராம்பு – 2, உடைத்த கடலை – மூன்று டீஸ்பூன், முந்திரி பருப்பு – 4, துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன். சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை – 2 கிராம்பு – 2, கல்பாசி – 2, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – 1, கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கையேந்தி பவன் வெள்ளை குருமா செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள், தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ரெண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின்னர் அதில் வறுத்து அரைக்க வேண்டிய எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்க்க வேண்டும். பெரிய வெங்காயம் ஒன்றை பொடிப் பொடியாக நறுக்கி சேருங்கள்.

vengayam

பின்னர் பச்சை மிளகாய் இரண்டை கீறி சேர்த்து, பூண்டை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள், சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள், 2 பட்டை, 2 கிராம்பு, நாலு முந்திரிப்பருப்பு சேருங்கள். துருவிய தேங்காய் 3 டேபிள்ஸ்பூன், 3 டீஸ்பூன் அளவிற்கு பொட்டுகடலை ஆகியவற்றை சேர்த்து லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அப்படியே ஆற விட்டு விடுங்கள். இவைகள் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இவற்றை சேர்த்து 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ரெண்டு துண்டு பட்டை, 2 துண்டு கிராம்பு, அரை டீஸ்பூன் சோம்பு, ரெண்டு துண்டு கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். இதனுடன் பச்சை மிளகாய் ஒன்றை கீறி, ஒரு கொத்து கறிவேப்பிலையும் போட்டு வதக்குங்கள்.

vanali

வெங்காயம் நன்கு வதங்கி வரும் சமயத்தில் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி துண்டுகள் அதிகம் மசிய கூடாது. அதிகம் மசிந்தால் தக்காளியில் இருக்கும் நிறம் குருமாவில் இறங்கிவிடும். எனவே வெள்ளை குருமாவிற்கு தக்காளியை அதிகம் மசிய வேண்டிய அவசியமில்லை. லேசாக வதங்கியதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொதிக்க விட வேண்டியது தான். மிக்ஸி ஜாரையும் கழுவி குருமாவிற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

kuzhambu

கையேந்தி பவன் குருமா தண்ணீராக தான் இருக்கும், ஆனால் சுவை சூப்பராக இருக்கும். பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு எல்லாம் சேர்த்து உள்ளதால் குருமா கொஞ்ச நேரத்தில் கெட்டியாகி விடும். எனவே ஒரு 2 நிமிடம் மூடி வைத்தால் நன்கு கொதித்து வரும். பிறகு அடுப்பை அணைத்து மல்லித்தழைகளை நறுக்கி சேர்த்து சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள பரிமாற வேண்டியது தான். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்கள்.

- Advertisement -