நாளை மறுநாள் தை அமாவாசை. இதை எல்லாம் மறக்காமல் செய்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.

vaikasi-amavasai

இன்று நாம் ஆன்மீக ரீதியில் செய்கின்ற எந்த ஒரு காரியமும் நமது முன்னோர்கள் தங்களின் அனுபவத்தில் ஆய்ந்து, அறிந்து நமக்கு வாழ்க்கை விதிகளாக ஏற்படுத்தியிருக்கின்றனர். அந்த வகையில் நமது பாரம்பரியத்தில் பன்னெடுங்காலமாக பின்பற்றி வரும் ஒரு சடங்கு ஒருவரின் பரம்பரையில் மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை தருவது ஆகும். இத்தகைய சடங்குகளை செய்வதற்குரிய ஒரு மிக சிறந்த நாள் “தை அமாவாசை” தினமாகும். மிக அற்புதமான இந்த தை மாத அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம், திதி தருதல் போன்றவற்றால் நமக்கு ஏற்படும் ஆன்மீக ரீதியிலான நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Amavasya-Poornima

பொதுவாக ஒரு வருடத்தில் தை, ஆடி, புரட்டாசி மாதத்தில் வருகின்ற மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் மிகவும் முக்கியமான தினங்களாகும். ஒவ்வொரு அமாவாசை திதி தினத்திலும் மறைந்த நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்கால நடைமுறை வாழ்க்கையில் அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. எனவே மற்ற அமாவாசை தினங்களில் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வருகின்ற அமாவாசை திதிகளில் தவறாமல் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

தை மாதம் பல ஆன்மீக சிறப்புகளை கொண்ட ஒரு மாதம் ஆகும். தை மாதத்தில் சூரியன் தனது தட்சிணாயனம் எனப்படும் தென் திசை நோக்கிய பயணத்திலிருந்து உத்தராயணம் எனப்படும் வடக்கு திசை நோக்கி பயணத்தை தொடங்கும் காலமாகும். இந்த உத்தராயணம் காலம் என்பது மிகவும் புண்ணியமான செயல்கள் அனைத்தையும் செய்வதற்கு ஏற்ற காலமாகும். தேவர்கள், பித்ரு லோகத்தில் வாழும் நமது முன்னோர்களுக்கு உத்திராயண காலம் என்பது ஒரு நாளின் பகல் பொழுது ஆகும். மகாபாரதத்தில் அம்பு படுக்கையில் வீற்றிருந்த பிதாமகர் பீஷ்மர் இந்த தை மாத உத்திராயண காலத்திலேயே தனது உயிரை நீத்து மீண்டும் பிறவா வீடு பேறு அடைந்தார்.

amavasai1

தை அமாவாசை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். பொதுவாக இத்தினத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை தீர்த்தங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடிய பின்பு மறைந்த உங்கள் முன்னோர்களுக்கான சிரார்த்த சடங்குகளை செய்வது சிறப்பு. தர்ப்பணம், திதி போன்றவற்றை அளித்த பின்பு சடங்குகளை செய்வித்த வேதியர்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப அரிசி, புத்தாடை, தட்சிணை போன்றவற்றை தானம் செய்வதால் உங்களை அண்டியிருக்கும் பித்ரு சாபங்கள், தோஷங்கள் ஆகியவை நீங்கும். மேலும் காய்கறிகளை பயன்படுத்தி செய்யபட்ட சாதத்தை முன்னோர்களை வணங்கி, காகங்களுக்கு வைத்த பின்பே நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் சாப்பிட வேண்டும்

மேலும் இத்தினத்தில் உங்கள் சக்திக்கு முடிந்த அளவிற்கு ஏழைகள், முதியோர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் செய்வதால் மறைந்த பித்ருக்களின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். தற்போது வரவிருக்கின்ற தை அமாவாசை வியாழக்கிழமை தினத்தில் வருகின்றது. பொதுவாக வியாழக்கிழமை சித்தர்கள், ஞானிகள் போன்றோரை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும்.

Amavasai Tharpanam

உங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் சடங்கை செய்த பிறகு, உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஏதேனும் சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். மேலும் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய தோஷங்களும் நீங்கி நன்மையான பலன்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுவதை நீங்களே உணர முடியும்.