நினைத்ததை நிறைவேற்றும் தைப்பூசம்! 18/1/2022 நாளை முருகனை வழிபடுவது எப்படி?

murugan-muruga
- Advertisement -

தைப்பூசத்தில் முருக பக்தர்கள் முருகனை வழிபடுவது சிறப்பம்சமாக இருந்து வருகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த தைப்பூசத் திருநாளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இத்தகைய அற்புதங்கள் நிறைந்த தைப்பூச வழிபாடு எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அறுபடை வீடுகளில் முக்கிய வீடாக விளங்கும் பழனி மலை ஆண்டவருக்கு இந்த தைப்பூச திருநாளில் கோலாகலமான பூஜைகள் செய்து காண கிடைக்காத அற்புத ஸ்வரூபமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். தைப்பூச நாளில் தான் அன்னை பார்வதி தேவி முருகனுக்கு வேலை வழங்கினார். தன் கையிலிருக்கும் வேலையை கொண்டு அசுர வதம் புரிந்து தேவர்களையும், பூலோக மக்களையும் முருகப்பெருமான் காத்தருளினார்.

- Advertisement -

எதிரிகள் தொல்லை நீங்க தைப்பூச நாளில் முருகனை மனமார நினைந்து வழிபட்டால் சகலமும் வெற்றியாகும். சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் இந்த தைப்பூச திருநாளில் சூரியனின் அம்சமாக இருக்கும் சிவனும், சந்திரனின் அம்சமாக இருக்கும் பார்வதி தேவியும் இணைந்து தங்கள் ஆற்றலை ஒருசேர வெளிப்படுத்துகின்றனர். இதனால் பிரபஞ்சம் முழுவதும் அதீத சக்தி கொண்டுள்ள இந்த தைப்பூசத்தன்று முழுநேர விரதம் இல்லாவிட்டாலும், அசைவ உணவுகளை தவிர்த்து பாலும், பழமும் மட்டும் உட்கொண்டு மனமார முருகனை பூஜிக்க வேண்டும்.

ஆறுமுகனுக்கு 6 அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு! மேலும் இந்நாளில் முருகன் கோவிலுக்கு சென்று முருகனையும், அவர் வைத்திருக்கும் வேலையும் வழிபடுபவர்களுக்கு தடைகள் அகன்று நினைத்த காரியம் கைகூடும். தைப்பூச நாளில் தான் இந்த பிரபஞ்சத்தில் நீர் உருவாகி நீரின் மூலம் அனைத்து உயிரினங்களும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. எல்லா உயிர்களின் பிறப்புக்கு காரணமான இந்த தைப்பூச நாளில் நம்முடைய சகல பாவங்களும் தீர, முருகனுக்கு அபிஷேக, ஆராதனைகளை தரிசிக்க வேண்டும்.

- Advertisement -

தம்பதிகளாக சென்று தைப்பூச விரதம் இருந்து முருகனை தரிசித்து வந்தால் ஒற்றுமை தழைத்தோங்கும். அடிக்கடி சண்டை போடுபவர்கள் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம். மேலும் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைப்பூசத்தன்று சனி பகவானுக்கு அபிஷேகம் புரிந்து 8 முறை வலம் வந்து வணங்கினால் தீராத எத்தகைய பிரச்சனைகளும் தீரும் என்கிற நம்பிக்கை உண்டு. தேவர்களின் குருவாக இருக்கும் குரு பகவானின் அருள் பெற தைப்பூசத்தன்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, குரு பகவான் மந்திரம் உச்சரித்து வணங்கி வரலாம்.

மேலும் வீட்டில் வேல் வைத்து இருப்பவர்கள் வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த வேல் வழிபாடு சிறந்த பலனை கொடுக்கும். நாளை தை மாதம் 5ஆம் தேதி அதிகாலை 5:58 மணியிலிருந்து நாள் முழுவதும் தைப்பூசம் நிறைந்துள்ளது. அதிகாலையிலேயே எழுந்து நீராடி நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு முருகன் மந்திரங்களையும் சஷ்டி கவசம், கந்தரலங்காரம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த கலிவெண்பா, கந்தரனுபூதி போன்றவற்றை படிக்கலாம். மேலும் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். முருகன் மட்டுமல்லாமல் சிவன், பார்வதி, குரு பகவான், சனி பகவான் ஆகியோரையும் வழிபட நினைத்த ஆசைகள் நினைத்தபடி நிறைவேறும் எனவே இந்நாளை தவறவிட வேண்டாம்.

- Advertisement -