குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்தா போதும் பத்து நிமிஷத்துல சூப்பரான தக்காளி கத்திரிக்காய் கடையல் தயார். சுட சுட இட்லிக்கு இந்த கடையலை வெச்சி சாப்பிட்டு பாருங்க எத்தனை இட்லி சாப்பிட்டோம்ன்னு உங்களுக்கே கணக்கே தெரியாது.

- Advertisement -

இட்லி தோசைக்கு எப்போதும் சட்னி சாம்பார் தான் அடிக்கடி செய்வோம். அப்படி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த கத்திரிக்காய் தக்காளி கடையல் செய்து சாப்பிட்டு பாருங்க, சுடச்சுட இட்லியோடு இதை வச்சு சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். ரெண்டு இட்லி சாப்பிடுறவங்க கூட கூட ரெண்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வாங்க இப்போ அந்த தக்காளி கத்தரிக்காய் கடையல் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த கடையல் செய்வதற்கு முதலில் கத்திரிக்காயை கொஞ்சம் பெரிய துண்டுகளாக அரிந்து தண்ணீரில் போட்டு விடுங்கள். அதே போல் ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி அதையும் பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். அதே போல் ஒரு பெரிய வெங்காயம், ரெண்டு பெரிய தக்காளி இரண்டையும் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.இத்துடன் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து கரைத்து அந்த தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தக்காளி கத்தரிக்காய் கடையல் செய்ய தொடங்கி விடலாம்.

- Advertisement -

குக்கரில் அரிந்து வைத்த கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, இவற்றுடன் பூண்டு ஐந்து பல், ஐந்து பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்பு என அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து விடுங்கள். இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் முழுவதுமாக இறங்கும் வரை காத்திருங்கள்.

விசில் இறங்கிய பிறகு குக்கரின் முடியை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக வடித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கத்திரிக்காய் உருளைக்கிழங்கு வெங்காயம் தக்காளி என அனைத்தையும் மத்து வைத்து நன்றாக கடைந்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டாம். அதன் பிறகு கரைத்து வைத்து புளித் தண்ணீரையும், மீதம் எடுத்து வைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயத்தையும் சேர்த்து இறக்கி இந்த தாளிப்பை குக்கரில் ஊற்று விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரோட்டு கடை தண்ணி குருமா செய்முறை விளக்கம்: ( Rottu kadai Thanni Kuruma Recipe in Tamil)

இப்போது மீண்டும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து 10 நிமிடம் கொதிக்க விட்டால், இந்த தாளிப்பு புளிக்க ரைசல் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்து அருமையான தக்காளி கத்திரிக்காய் கடையில் தயாராகி விடும். கடைசியாக இருக்கும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லியை பொடியாக மேலே தூவி விட்டு இறக்கி விடுங்கள். சுவையான கமகம வென்று மணத்தோடு தக்காளி கத்தரிக்காய் கடையல் தயார்.

- Advertisement -