பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் கஷ்டங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் செவ்வாய்க்கிழமையில் வழிபாடு செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்றும், சஷ்டி திதியில் வழிபாடு செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் போன்ற வரங்கள் கிடைக்கும் என்றும், அதே போல் கிருத்திகை நட்சத்திரத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு வளமான வாழ்க்கை அமையும் என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட முருகப்பெருமானை அனுதினமும் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய தலையெழுத்தே மாறும் என்று கூறப்படுகிறது. அப்படி தலையெழுத்தை மாற்றுவதற்கு முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகன் வழிபாடு
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கென்று பலவிதமான நாட்கள் திகழ்கின்றன. அந்த நாட்களில் மட்டும்தான் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று இல்லை. அனுதினமும் நம் முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். எப்படி ஆலயத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமானுக்கு அனுதினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறதோ அதே போல் நாமும் நம் வீட்டிலும், மனதிலும் இருக்கக்கூடிய முருகப்பெருமானையும் அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி நாம் அனுதினமும் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நம்முடைய தலையெழுத்தை மாற்றும் அளவிற்கு முருகப்பெருமான் நமக்கு அருள் புரிவார்.
நமக்கு எப்படிப்பட்ட மோசமான தலையெழுத்து இருந்தாலும் அந்த தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றுவதற்கு முருகப்பெருமானின் அருள் என்பது வேண்டும். பிரம்மரிடமே பிரணவத்திற்கு பொருள் கேட்டு சிறையில் அடைத்தவர் முருகன் அல்லவா? அப்படிப்பட்ட பிரம்மர் எழுதிய தலையெழுத்தை மாற்றும் அற்புத ஆற்றலும் முருகப்பெருமானுக்கு இருக்கிறது. அப்படி நம்முடைய தலையெழுத்தை அவர் மாற்ற வேண்டும் என்றால் அனுதினமும் இந்த ஒரு பாடலை நாம் பாடி முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த பாடல் அருணகிரிநாதர் பாடிய கந்தர் அலங்காரம் என்னும் 108 பாடல்களுள் ஒரு பாடலாக திகழ்கிறது. இந்த பாடலை தினமும் காலையிலோ மாலையிலோ தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஆறு முறை மனதார முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டும். ஆறு முறை கூற இயலாது என்பவர்கள் ஒரு முறையேனும் கூறினால் கூட நல்ல பலன் கிடைக்கும். நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியது நம்முடைய கர்ம வினைகளே. அந்த கர்ம வினைகளை நீக்கி நம்முடைய தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றுவதற்கு முருகப்பெருமானின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படி முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு உதவக்கூடிய பாடலாக தான் இந்த பாடல் திகழ்கிறது.
பாடல்
“சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.”
விளக்கம்
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின்
திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
எழுதப்பட்டிருந்த [‘விதி’ என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.
இதையும் படிக்கலாமே:பிரச்சினைகள் தீர தேய்பிறை அஷ்டமி பரிகாரம்
முழு மனதோடு முருகப்பெருமானை அனு தினமும் இந்த எளிமையான முறையில் வழிபாடு செய்தாலே நம்முடைய தலையெழுத்து மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்