சங்கடஹர சதுர்த்தி என்பது சங்கடங்களை தீர்க்கும் நல்ல நாளாகும். நம் வாழ்வில் இருக்கும் சங்கடங்கள் அதாவது துன்பங்கள் அனைத்தையும் தீர்த்து நிம்மதியான நல்வாழ்க்கையை கொடுக்கக்கூடிய விரத நாளாகும். முழு முதற்கடவுளான விநாயகர் முதன் முதலில் அன்னை பார்வதி தேவிக்கு உபதேசித்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். நாளை சித்திரை மாதம் முதல் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது. இந்நாளில் எப்படி விநாயகப் பெருமானை வழிபட்டு கடன்களை நிவர்த்தி பெற செய்வது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.
சுக்ல பட்சம் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை வர சதுர்த்தி என்று கூறுவார்கள். இந்த சதுர்த்தியில் சந்திரனை தரிசிப்பதும், நான்காம் நாள் பிறையை தரிசிப்பதும் கெடு பலன்களை கொடுக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால் நாளை கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தியில் வரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி என்பார்கள். இந்த நாளில் சந்திரனை தரிசிப்பதும், விநாயகருக்கு விரதம் இருந்து மந்திரங்களை சொல்லி வழிபடுவதும் வேண்டிய வரங்களை கொடுக்கும்.
தீராத கடன்கள் தீர்ந்து, நம் சங்கடங்கள் மறைந்து நிம்மதியான வாழ்க்கை அமைய, சித்திரை மாதம் துவங்கிய முதல் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியில், விநாயகருக்கு இந்த மந்திரங்களை சொல்லி விரதம் இருந்து வழிபடுங்கள். காலையிலேயே எழுந்து நீராடி குளித்து முடித்து சுத்தபத்தமாக விநாயகருக்கு பிடித்தமான நைவேத்தியங்கள் அனைத்தும் தயார் செய்து படைத்து வழிபட வேண்டும். முழு நாள் உபவாசம் இருப்பது ரொம்ப விசேஷமானது. முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
விநாயகரை அருகம்புல்லால் அலங்கரித்து மாலை சாற்றி, வெள்ளருக்கு மாலையும் கோர்த்து சாற்றி வையுங்கள். சுண்டல், அப்பம், பழங்கள், மோதகம், விநாயகர் பொங்கல், கொழுக்கட்டை, சித்ரான்னங்கள் என்று விநாயகருக்கு பிடித்த பொருட்களை தயார் செய்து படையுங்கள். பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி பூஜைகளை துவங்குங்கள். “உன்னை நினைத்து பூஜைகளை துவங்குகிறேன், தடை ஏதும் இல்லாமல் நல்லபடியாக பூஜையை நடத்திக் கொடுக்குமாறு வேண்டிக் கொள்வது” இம்மந்திரத்தின் பொருளாகும்.
விநாயகர் மந்திரம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும்,
சசிவர்ணம், சதுர்புஜம்,
பிரஸன்ன வதனம் தியாயேத்
ஸர்வவிக்ன உபசாந்தயே!!
அருகம்புல்லை கொண்டு அர்ச்சனை செய்து விநாயகர் அகவல், விநாயகர் புராணம் போன்றவற்றை படித்து விநாயகரை மனதில் நிறுத்தி பூஜையை செய்ய வேண்டும். கடன்கள் தீருவதற்கு கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து கற்பூர ஆரத்தி காண்பியுங்கள். இம்மந்திரத்தை சொல்லி தான் சந்திரன் தான் செய்த செயலில் இருந்து விநாயகரிடம் பாவ விமோசனத்தை பெற்றார் என்கிறது புராணங்கள்.
தவம் காரணம் காரண
காரணாநாம் க்ஷமஸ்வ மே
கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்!!
இதையும் படிக்கலாமே:
வெற்றி தரும் முருகர் நாமம்
நமக்கு ஏற்பட்டு இருக்கின்ற தோஷங்களில் இருந்தும், சாபம், பாவம், தரித்திரம், திருஷ்டிகள் அனைத்திலிருந்தும் விமோசனம் பெற்று கடன் என்னும் துன்பத்தில் இருந்து நம்மை விடுதலை செய்து, செல்வ செழிப்போடு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்க விநாயகரை இந்த முறையில் வழிபட்டு, பின்னர் மாலையில் கோவிலுக்கு சென்று 16 வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் அவருக்கு செய்வதை கண் குளிர தரிசித்து பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.