டக்குனு 5 நிமிடத்தில் தில்லாலங்கடி ரசம் ஒருமுறை இப்படி வைத்து பாருங்களேன். ஆற அமர பார்த்து பார்த்து ரசம் வைத்தால் கூட இந்த சுவை கிடைக்காது.

rasam
- Advertisement -

அது என்னங்க தில்லாலங்கடி ரசம். சில சமயம் சூப்பராக ரசம் வைக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து ரசம் வைப்போம். ஆனால் அந்த ரசம் சுவையாக இருக்காது. கடைசி சமயத்தில் டைம் இல்லை என்று சில தில்லாலங்கடி வேலையை செய்து அவசர அவசரமாக ஒரு ரசத்தை வைப்போம். அந்த ரசத்தில் டாப்பு டக்கரு சுவை வந்துவிடும். அப்படி அவசர அவசரமாக உங்களுக்கு சமைக்கவே நேரமில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு பசிக்கிறது. அவசரப் படுகிறார்கள் என்றால் சுடசுட இப்படி ஒரு ரசத்தை வைத்துப் பாருங்கள். அட்டகாசமாக இருக்கும். இதுதாங்க தில்லாலங்கடி ரசம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வரமல்லி – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், துவரம்பருப்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொரகொரப்பாக முதலில் அரைத்துக் கொள்ளவேண்டும். இதோடு கருவேப்பிலை – 1 கொத்து, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 1, எலுமிச்சை பழ அளவு – புளி, தக்காளி பழம் – 2, இந்த பொருட்களையும் போட்டு கொரகொரப்பாக அரைத்து இந்த விழுதை அப்படியே ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த விழுதுடன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், சாம்பார் தூள் – 1 ஸ்பூன், சேர்த்து 2 டம்ளர் அளவு மட்டும் தண்ணீரை ஊற்றி, அப்படியே அடுப்பில் வைத்து நுரை கட்டி வரும்போது ரசத்துக்கு தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். கொத்தமல்லித்தழையை இறுதியாக தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த ரசம் தளதளவென கொதித்தால் நன்றாக இருக்காது. (சர்க்கரையை கட்டாயம் சேருங்கள். அப்போதுதான் இதனுடைய சுவை கூடுதலாக இருக்கும்.)

ஒரு தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வர மிளகாய் கிள்ளிப் போட்டு மணக்க மணக்க தாளித்து இதை அப்படியே ரசத்தில் ஊற்றி விடுங்கள். ரசத்தை ஒரு தட்டு போட்டு 10 நிமிடம் மூடி விடுங்கள். அவ்வளவு தாங்க. மணக்க மணக்க சூப்பரான ரசம் தயார். இப்படி ஒருமுறை ரசம் வைத்து தான் பாருங்களேன்.

- Advertisement -

ஒரு சில பேர் ரசம் கொதிக்க கூடாது என்று சொல்லுவார்கள். ஒரு சில பேர் ரசத்தில் இருக்கும் புளி தக்காளியின் பச்சை வாடை போக கொதிக்க வைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். நிறைய பேருக்கு இதில் குழப்பம் இருக்கலாம். மிளகுத் தூள் பூண்டு சேர்த்த பின்பு எப்போதுமே ரசம் நீண்ட நேரம் கொடுக்கக்கூடாது. தேவை என்றால் தக்காளி புளி கரைசலை மட்டும் தனியாக கொதிக்க வைத்துவிட்டு அதன் பின்பு மசாலா பொருட்களை சேர்த்து லேசாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

தப்பித்தவறி தெரியாமல் மிளகு தூள் பூண்டு சேர்த்து ரசத்தை நிறைய கொதிக்க வைத்து விட்டீர்கள் எனும் பட்சத்தில், அடுப்பை அணைத்து விட்டு அதில் உடனடியாக கொஞ்சம் பச்சை தண்ணீரை கலந்து விட்டால் ரசம் சுவையாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -