திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்

Lord Murugan Temple

“தமிழர்களின் கடவுள்” என்று முருகப்பெருமானுக்கு பெயருண்டு. தமிழ் மக்களின் சரித்திரத்தில் முருகனின் வழிபாடு எப்போதும் இருந்து வந்திருப்பதை நாம் அறிகிறோம். “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்று முருகன் மலைமீது கோவில் கொள்வதை பற்றி கூறப்படும் ஒரு வாக்கியமாகும். ஆனால் பொங்கி வரும் கடல் அலை “செந்திலாண்டவனின்” பாதம் பணியும் கடற்கரையில் கோவில் கொண்டிருக்கும் “திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின்” சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Thiruchendur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் கோவில் தல வரலாறு

மிகவும் பழமையானது இந்த திருச்செந்தூர் கோவில். இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் என அழைக்கப்படுகிறார். இங்கு சூரபத்மனை போரில் ஜெயித்ததால் முருகன் “செயந்தியாண்டவர்” என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் “செந்திலாண்டவர்” என மருவியது. அது போல் இக்கோவில் இருக்கும் ஊரும் “திருசெயந்தியூர்” என்பதிலிருந்து “திருச்செந்தூர்” என்று மாறியது. முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாவதாகவும், கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஒரே படை வீடாக இருப்பதும் இந்த திருசெந்தூர் தான்.

கந்த புராணத்தின் படி கச்சியப்ப சிவாச்சாரியார் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்தையும் காக்கவும், அசுரர்களை அழிக்கவும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் யாகம் வளர்த்து, கும்பத்தில் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்து, சிவாச்சாரியாரும் மற்றவர்களும் முருகனுக்கு சஷ்டி நோன்பு இருந்தனர். இதனால் மனம் குளிர்ந்த முருகன் அவர்களுக்கு அருளினார். இதனை நினைவு கூறியும் விதமாகவே ஐப்பசி மத அமாவாசைக்கு பிறகு கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.

Lord Murugan

தேவர்களுக்கு உதவ சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவித்த ஆறு சக்திகள், ஆறு குழந்தைகளாக மாறி, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, ஆறு உருவங்களும் ஒன்று சேர்ந்து, முருகனாக உருப்பெற்றார். ஆறு முகத்தை தனது உருவில் கொண்டிருப்பதால், முருகனுக்கு “ஆறுமுகம்” என்ற பெயரும் உண்டு. சூரபத்மனுடன் போர்புரிய இந்த கடற்கரைக்கு முருகப்பெருமான் வந்த போது, நவகிரகங்களில் சுபகிரகம் ஆனவரும், தேவர்களுக்கு குருவாக இருப்பவரான “குரு பகவான்” இங்கு தவமியற்றி கொண்டிருந்தார். சிவனின் மைந்தனான முருகனை பணிந்து வணங்கிய குரு பகவான் அசுரர்களின் வரலாற்றை பற்றி கூறி, சூரபத்மனை போரில் வெல்வதற்கு முருகப்பெருமானுடனும், அவரது படையினருடனும் ஆலோசனை செய்து சிறந்த அறிவுரைகளை வழங்கினார். இதனால் மிகவும் மகிழ்ந்த முருகப்பெருமான் தான் இங்கே கோவில் கொள்ளும் வரத்தை அருளினார். இதனால் மகிழ்ந்த குரு பகவான் விஸ்வகர்மாவை அழைத்து இங்கு கோவில் எழுப்பினார். எனவே இங்கு கோவில் கொண்டிருக்கும் செயந்தி நாதரை வணங்குவதால் குருபகவானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.

- Advertisement -

முருகனுக்கு ஆறு படை வீடுகள் என்று வழக்கமாக கூறப்படும் ஒரு வாக்கியமாகும்.போர்வீரர்களின் குழுமத்தை படை என அழைப்பார்கள். முருகப்பெருமான் சூரபத்மனை அளிப்பதற்கு தனது போரிடும் படை வீரர்களோடு தங்கியிருந்த இடம் திருச்செந்தூர் தலமாகும். எனவே “படை வீடு” என அழைக்கப்படும் தகுதி திருச்செந்தூருக்கு மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் தன்னை காண வரும் பக்தர்களின் அனைத்து கஷ்டங்களையும் போக்கும் முருகனின் “ஆற்றுப்படுத்தும்”( ஆறுதல் அளிக்கும்) வீடுகள், “ஆறு படைவீடுகளாக” மாறிப்போனது.

Murugan

சூரபதம்னை ஐப்பசி மாதம் சஷ்டி தினத்தில் முருகபெருமான் வதம் செய்ததால், இங்கு கந்த சஷ்டி விழா ஐப்பசி மாதத்தில் மிக சிறப்பான முறையில் இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழாவின் போது மக்களின் நன்மைக்காக, சண்டி யாகம் செய்யப்படுகிறது. ஆறு நாட்கள் நடக்கும் இந்த கந்த சஷ்டி விழாவை காண லட்சக்கணக்கில் மக்கள் திருச்செந்தூர் கோவில் மற்றும் கடற்கரை பகுதியில் கூடுவர்.

தல சிறப்பு

இங்கு கோவில் கொண்டிருக்கும் செந்தில் ஆண்டவர் நவகிரகங்களில் குரு பகவானின் சாராம்சத்தை கொண்டவராக இருக்கிறார். எனவே ஜாதகத்தில் குரு பகவானின் அருள் பெற்று, அவரது திசை காலத்தில் சிறந்த நன்மைகளை பெற பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இந்த திருசெந்தூர் கோவில் சிறந்த குரு பரிகார தலமாகும். அரசியலில் பல வெற்றிகளையும், உயர்பதவிகளையும் பெற விரும்புபவர்கள் இக்கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். முருகன் அசுரர்களை வதம் செய்தவர் என்பதால் தீய ஆவி பாதிப்பு கொண்டவர்கள், பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோவிலுக்கு சென்று வழிபடலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, கோவிலை வலம் வந்து வழிபட நன்மக்கள் பேற்றை அருள்வார் முருகன்.

murugan manthiram

அனைத்து கோவில்களிலும் உற்சவர் ஒன்று தான் இருக்கும். ஆனால் இந்த திருச்செந்தூர் கோவிலில் “சண்முகர், ஜெயந்திநாதர், குமராவிடங்கர், அலைவாய் பெருமாள்” என்று நான்கு உற்சவர்கள் இருக்கினர். திருச்செந்தூர் முருகனுக்கு தினமும் 9 கால பூஜைகள் நடக்கிறது. இப்பூஜையின் போது சிறுபருப்பு பொங்கல், அப்பம், கஞ்சி, தோசை, நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்த பொரி, அதிரசம், தேன்குழல், வெல்லம் கலந்த உருண்டை ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

கோவில் அமைவிடம்

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை

கோவில் முகவரி

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம் – 628205

தொலைபேசி எண்

4639 – 242221

இதையும் படிக்கலாமே:
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tiruchendur Murugan kovil timings, Tiruchendur Murugan kovil history in Tamil, Tiruchendur Murugan kovil varalaru, Tiruchendur Murugan kovil address, Tiruchendur Murugan kovil contact number or Tiruchendur Murugan kovil phone number are here. One can get full details of Thiruchendur Murugan koil in this page.