திருச்செந்தூர் முருகன் கடலைப் பார்த்து காட்சி தர காரணம் என்ன ?

thiruchendur-murugan

தமிழ் கடவுளான முருக பெருமான் குறிஞ்சி நிலத்தின் கடவுளாகவும், இந்து சமய கடவுளாகவும் போற்றப்படுகிறார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகப்பெருமானின் வழிபாட்டு தலங்கள் பல இருந்தாலும், அவற்றுள் சிறப்புமிக்க தலங்கள் ஆறு ஆகும். இந்த ஆறு வழிபாட்டு தலங்களும் அறுபடை வீடுகள் எனப்படுகின்றது. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனிமலை,சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவையாகும்.

Swamimalai_Murugan_Temple

இரண்டாம்படை வீடான திருச்செந்தூரில் முருகப்பெருமான் கையில் தாமரை மலருடன் திருக்கடலை பார்த்து கிழக்கு திசையை நோக்கி காட்சி தருகிறார்.ஏன் அவ்வாறு காட்சி அளிக்கிறார் என்றால் அவர் தந்தையாகிய சிவபெருமானை தாமரை மலரோடு பூஜை செய்கையில் தேவர்கள் முருகப்பெருமானை “சுவாமி” என்று கூப்பிடுகையில் அவர் தன் தந்தையாகிய சிவபெருமானை பூஜிப்பதை நிறுத்திவிட்டு கையில் தாமரை மலரோடு தேவர்களுக்கு திருக்கடலை நோக்கி காட்சி அளிக்கிறார்.

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த சூரபத்மனை அழிக்க சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டனர். இதனால் சிவபெருமான் முருகப்பெருமானை அழைத்து தேவர்களுக்கு தொல்லை கொடுத்த சூரபத்மனை அழித்து வர ஆணையிடுகிறார். பின்பு, முருகப் பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த சூரனை ஜெயம்கொண்டதால் “ஜெயந்திநாதர் ” என்றும் பின்பு செந்தில்நாதர் என்றும் போற்றப்படுகிறார் முருகப்பெருமான். சூரனை ஜெயம் கொண்ட இந்த திரு தலமானது “திருஜெயந்திபுரம்” என பெயர் பெற்று பின்னாளில் இதுவே “திருச்செந்தூர்” என்று அழைக்கப்படுகிறது.

Tiruchendur

இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் மட்டும் கடற்கரை அருகில் நிலத்தில் அமைந்துள்ளது. மற்ற ஐந்து படைவீடுகளும் மலையில் கோயிலாக கொண்டுள்ளது.திருச்செந்தூர் கோவிலை பொறுத்தவரை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்து வைக்கப்படுகிறது.

முருகப்பெருமானின் பெருமைகளை பற்றி “திருமுருகாற்றுப்படை” என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி மூலம் முருகப்பெருமானின் வரலாற்றை அறியலாம். மேலும் கந்த சஷ்டி கவசம்,சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா போன்றவை முருகனின் பெருமைகளை கூறுகிறது. படிக்காதவர்கள் கூட மிகவும் எளிதாக ஜபிக்கக்கூடிய வகையில் உள்ள “ஓம் சரவணபவ ” என்னும் மந்திர சொல்லால் முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.

murugan

முருக பெருமான் மயிலை தன் வாகனமாக கொண்டதால் “சிகிவாகனன்” என்று போற்றப்படுகிறார். சிகி என்றால் மயில் எனப்படும். வள்ளியை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் “வள்ளிகல்யாணசுந்தரன்” என்றும் அழைக்கப்படுகிறார். அதேபோல் பிரம்மனின் அகந்தையை ஒழித்து கட்டியதால் “பிரம்மசாஸ்தா” எனவும் வணங்கப்படுகிறார். இப்படி உலகத்தையே மயிலால் சுற்றி வந்த நம் மயில்வாகனனின் பெருமைகளை சொல்லி மாளாது.