திருக்குறள் அதிகாரம் 106- இரவு

Thirukkural athikaram 106
- Advertisement -

அதிகாரம் 106 / Chapter 106 – இரவு

குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று

மு.வ விளக்க உரை:
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

கலைஞர் விளக்க உரை:
கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல

- Advertisement -

குறள் 1052:
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

மு.வ விளக்க உரை:
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

கலைஞர் விளக்க உரை:
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்

Thiruvalluvar

குறள் 1053:
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து

மு.வ விளக்க உரை:
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

கலைஞர் விளக்க உரை:
உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்

குறள் 1054:
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

மு.வ விளக்க உரை:
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

கலைஞர் விளக்க உரை:
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்

Thiruvalluvar

குறள் 1055:
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது

மு.வ விளக்க உரை:
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

கலைஞர் விளக்க உரை:
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்

குறள் 1056:
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்

மு.வ விளக்க உரை:
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

கலைஞர் விளக்க உரை:
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்

Thiruvalluvar

குறள் 1057:
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து

மு.வ விளக்க உரை:
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

கலைஞர் விளக்க உரை:
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்

குறள் 1058:
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று

மு.வ விளக்க உரை:
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

கலைஞர் விளக்க உரை:
வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை

Thiruvalluvar

குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை

மு.வ விளக்க உரை:
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?

கலைஞர் விளக்க உரை:
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்

குறள் 1060:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி

மு.வ விளக்க உரை:
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

கலைஞர் விளக்க உரை:
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 101 – நன்றியில் செல்வம்

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 106 – Thirukkural Iravu in Tamil with meaning or Thirukkural Iravu adhikaram in Tamil. It is also called as Thirukkural Iravu lyrics or Thirukkural Iravu kural in Tamil with meaning.

- Advertisement -