திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

Thirukkural athikaram 36
- Advertisement -

அதிகாரம் 36 / Chapter 36 – மெய்யுணர்தல்

குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

மு.வ விளக்க உரை:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

கலைஞர் விளக்க உரை:
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது

- Advertisement -

குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

மு.வ விளக்க உரை:
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

கலைஞர் விளக்க உரை:
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்

Thiruvalluvar

குறள் 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து

மு.வ விளக்க உரை:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

கலைஞர் விளக்க உரை:
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்

குறள் 354:
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு

மு.வ விளக்க உரை:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

கலைஞர் விளக்க உரை:
உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை

Thiruvalluvar

குறள் 355:
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

மு.வ விளக்க உரை:
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

கலைஞர் விளக்க உரை:
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்

குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

மு.வ விளக்க உரை:
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

கலைஞர் விளக்க உரை:
துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்

Thiruvalluvar

குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

மு.வ விளக்க உரை:
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

கலைஞர் விளக்க உரை:
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்

குறள் 358:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு

மு.வ விளக்க உரை:
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

கலைஞர் விளக்க உரை:
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்

Thiruvalluvar

குறள் 359:
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

மு.வ விளக்க உரை:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.

கலைஞர் விளக்க உரை:
துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்

குறள் 360:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்

மு.வ விளக்க உரை:
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

கலைஞர் விளக்க உரை:
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 36 – Thirukkural Mei unarthal in Tamil with meaning or Thirukkural Mei unarthal adhikaram in Tamil. It is also called as Thirukkural Mei unarthal lyrics or Thirukkural Mei unarthal kural in Tamil with meaning.

- Advertisement -