திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்

Thirukkural athikaram 114
- Advertisement -

அதிகாரம் 114 / Chapter 114 – நாணுத் துறவுரைத்தல்

குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி

மு.வ விளக்க உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

கலைஞர் விளக்க உரை:
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை

- Advertisement -

குறள் 1132:
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

மு.வ விளக்க உரை:
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

கலைஞர் விளக்க உரை:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்

Thiruvalluvar

குறள் 1133:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

மு.வ விளக்க உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

கலைஞர் விளக்க உரை:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

குறள் 1134:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

மு.வ விளக்க உரை:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

கலைஞர் விளக்க உரை:
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது

Thiruvalluvar

குறள் 1135:
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

மு.வ விளக்க உரை:
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

கலைஞர் விளக்க உரை:
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்

குறள் 1136:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்

மு.வ விளக்க உரை:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

கலைஞர் விளக்க உரை:
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்

Thiruvalluvar

குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்

மு.வ விளக்க உரை:
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

கலைஞர் விளக்க உரை:
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை

குறள் 1138:
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்

மு.வ விளக்க உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

கலைஞர் விளக்க உரை:
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்

Thiruvalluvar

குறள் 1139:
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு

மு.வ விளக்க உரை:
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

கலைஞர் விளக்க உரை:
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

குறள் 1140:
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு

மு.வ விளக்க உரை:
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

கலைஞர் விளக்க உரை:
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 114 – Thirukkural Naanuth Thuravuraithal in Tamil with meaning or Thirukkural Naanuth Thuravuraithal adhikaram in Tamil. It is also called as Thirukkural Naanuth Thuravuraithal lyrics or Thirukkural Naanuth Thuravuraithal kural in Tamil with meaning.

- Advertisement -