திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்

Thirukkural athikaram 80
- Advertisement -

அதிகாரம் 80 / Chapter 80 – நட்பாராய்தல்

குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு

மு.வ விளக்க உரை:
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

கலைஞர் விளக்க உரை:
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்

- Advertisement -

குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்

மு.வ விளக்க உரை:
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

கலைஞர் விளக்க உரை:
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்

Thiruvalluvar

குறள் 793:
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு

மு.வ விளக்க உரை:
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

கலைஞர் விளக்க உரை:
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்

குறள் 794:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு

மு.வ விளக்க உரை:
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

கலைஞர் விளக்க உரை:
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்

Thiruvalluvar

குறள் 795:
அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்

மு.வ விளக்க உரை:
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

கலைஞர் விளக்க உரை:
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்

குறள் 796:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

மு.வ விளக்க உரை:
கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.

கலைஞர் விளக்க உரை:
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது

Thiruvalluvar

குறள் 797:
ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.

கலைஞர் விளக்க உரை:
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்

குறள் 798:
உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

மு.வ விளக்க உரை:
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.

கலைஞர் விளக்க உரை:
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்

Thiruvalluvar

குறள் 799:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்

மு.வ விளக்க உரை:
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.

கலைஞர் விளக்க உரை:
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்

குறள் 800:
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு

மு.வ விளக்க உரை:
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.

கலைஞர் விளக்க உரை:
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 75 – அரண்

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 80 – Thirukkural Natpu Aaraithal in Tamil with meaning or Thirukkural Natpu Aaraithal adhikaram in Tamil. It is also called as Thirukkural Natpu Aaraithal lyrics or Thirukkural Natpu Aaraithal kural in Tamil with meaning.

- Advertisement -