திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்

Thirukkural athikaram 130
- Advertisement -

அதிகாரம் 130 / Chapter 130 – நெஞ்சொடு புலத்தல்

குறள் 1291:
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது

மு.வ விளக்க உரை:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?

கலைஞர் விளக்க உரை:
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

- Advertisement -

குறள் 1292:
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

மு.வ விளக்க உரை:
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!

கலைஞர் விளக்க உரை:
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே

Thiruvalluvar

குறள் 1293:
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்

மு.வ விளக்க உரை:
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?

கலைஞர் விளக்க உரை:
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

குறள் 1294:
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று

மு.வ விளக்க உரை:
நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

கலைஞர் விளக்க உரை:
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை

Thiruvalluvar

குறள் 1295:
பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

மு.வ விளக்க உரை:
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

கலைஞர் விளக்க உரை:
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்

குறள் 1296:
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு

மு.வ விளக்க உரை:
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

கலைஞர் விளக்க உரை:
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது

Thiruvalluvar

குறள் 1297:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு

மு.வ விளக்க உரை:
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

கலைஞர் விளக்க உரை:
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்

குறள் 1298:
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

மு.வ விளக்க உரை:
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

கலைஞர் விளக்க உரை:
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்

Thiruvalluvar

குறள் 1299:
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி

மு.வ விளக்க உரை:
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

கலைஞர் விளக்க உரை:
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

குறள் 1300:
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி

மு.வ விளக்க உரை:
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

கலைஞர் விளக்க உரை:
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 130 – Thirukkural Nenjodu pulaththal in Tamil with meaning or Thirukkural Nenjodu pulaththal adhikaram in Tamil. It is also called as Thirukkural Nenjodu pulaththal lyrics or Thirukkural Nenjodu pulaththal kural in Tamil with meaning.

- Advertisement -