திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

Thirukkural athikaram 90
- Advertisement -

அதிகாரம் 90 / Chapter 90 – பெரியாரைப் பிழையாமை

குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

மு.வ விளக்க உரை:
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

கலைஞர் விளக்க உரை:
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்

- Advertisement -

குறள் 892:
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்

மு.வ விளக்க உரை:
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

கலைஞர் விளக்க உரை:
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்

Thiruvalluvar

குறள் 893:
கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு

மு.வ விளக்க உரை:
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

கலைஞர் விளக்க உரை:
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்

குறள் 894:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்

மு.வ விளக்க உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

கலைஞர் விளக்க உரை:
எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்

Thiruvalluvar

குறள் 895:
யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்

மு.வ விளக்க உரை:
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

கலைஞர் விளக்க உரை:
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது

குறள் 896:
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

மு.வ விளக்க உரை:
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

கலைஞர் விளக்க உரை:
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது

Thiruvalluvar

குறள் 897:
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்

மு.வ விளக்க உரை:
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?

கலைஞர் விளக்க உரை:
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்

குறள் 898:
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து

மு.வ விளக்க உரை:
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

கலைஞர் விளக்க உரை:
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்

Thiruvalluvar

குறள் 899:
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

மு.வ விளக்க உரை:
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

கலைஞர் விளக்க உரை:
உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்

குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

மு.வ விளக்க உரை:
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

கலைஞர் விளக்க உரை:
என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 90 – Thirukkural Periyaraip piḻaiyamai in Tamil with meaning or Thirukkural Periyaraip piḻaiyamai adhikaram in Tamil. It is also called as Thirukkural Periyaraip piḻaiyamai lyrics or Thirukkural Periyaraip piḻaiyamai kural in Tamil with meaning.

- Advertisement -