திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு

Thirukkural athikaram 2
- Advertisement -

அதிகாரம் 2 / Chapter 2 – வான்சிறப்பு / வான் சிறப்பு

குறள் 11:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

மு.வ விளக்கம்
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்கம்
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

கலைஞர் விளக்கம்
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

- Advertisement -

குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

மு.வ விளக்கம்
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே

கலைஞர் விளக்கம்
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது

Thiruvalluvar

குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

மு.வ விளக்கம்
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

சாலமன் பாப்பையா விளக்கம்
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்

கலைஞர் விளக்கம்
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்

குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

மு.வ விளக்கம்
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

சாலமன் பாப்பையா விளக்கம்
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்

கலைஞர் விளக்கம்
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்

Thiruvalluvar

குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

மு.வ விளக்கம்
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

சாலமன் பாப்பையா விளக்கம்
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

கலைஞர் விளக்கம்
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்

குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

மு.வ விளக்கம்
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது

சாலமன் பாப்பையா விளக்கம்
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்

கலைஞர் விளக்கம்
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்

Thiruvalluvar

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

மு.வ விளக்கம்
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்

சாலமன் பாப்பையா விளக்கம்
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்

கலைஞர் விளக்கம்
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்

குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மு.வ விளக்கம்
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது

சாலமன் பாப்பையா விளக்கம்
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது

கலைஞர் விளக்கம்
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

Thiruvalluvar

குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

மு.வ விளக்கம்
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா விளக்கம்
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

கலைஞர் விளக்கம்
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

குறள் 20:
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

மு.வ விளக்கம்
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

சாலமன் பாப்பையா விளக்கம்
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது

கலைஞர் விளக்கம்
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

English Overview:
Here we have Thirukkural adhikaram 2 – Thirukkural vaan sirappu in Tamil with meaning or Thirukkural van sirappu adhikaram in Tamil. It is also called as Thirukkural vaan sirappu lyrics or Thirukkural vaan sirappu kural in Tamil with meaning.

- Advertisement -