திருநங்கையர்களின் சாபமும், ஆசிர்வாதமும் பலிக்குமா? இவர்களைப் பற்றி நீங்கள் அறியப்படாத, பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

aravanigal9

இந்த உலகத்தில், இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் இறைவனால் படைக்கப்பட்டவை தான். அதில், உயர்ந்தது தாழ்ந்தது, நல்லது கெட்டது, என்று பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதர்களிடம் தான் உள்ளதே தவிர, இந்த உலகத்தில் படைத்த உயிரினங்களை, என்றுமே அந்த இறைவன் பாரபட்சதோடு பார்த்ததில்லை. இறைவனின் பார்வையில் எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான். அந்த வரிசையில், மனிதப் பிறவியில் ஆணினம் பெண்ணினம் என்று படைத்த, அதே இறைவன் தான் மூன்றாவது பாலினமான திருநங்கைகளையும் படைத்துள்ளார்.

aravanigal

இந்த சமூகம் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும், இந்த திருநங்கைகளை பற்றி தான், நாம் அறியாத, பல தகவல்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த காலகட்டத்தில் திருநங்கையர்கள் என்றாலே, நம்முடைய அகராதியில் தவறானவர்கள், என்ற ஒரு அர்த்தம் மட்டும்தான் நிலைத்து நிற்கின்றது.

இந்த திருநங்கையர்களை அரவாணிகள், அலிகள், பேடுகள், பேடிகள், நபுஞ்சன், சண்டன், அண்ணகன், பெட்டையன் என்று பல பெயர்களை கொண்டு அழைப்பார்கள். இந்தப் பெயர்களெல்லாம், இதிகாசங்களில் திருநங்கையர்களை, அழைத்த பெயர்கள் தானே தவிர, அவர்களை திட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. இந்த சமூகத்தினர், இந்த வார்த்தைகளை தவறாக மாற்றி விட்டார்கள் என்பதுதான் உண்மை.

aravanigal3

அதாவது, புரியும்படி சொல்லப்போனால், ஆண் தன்மை கொண்டவர்கள், பெண் தன்மையோடு சேரும் பட்சத்தில், அவர்களுக்கு ‘பேடி’ என்ற பெயர் இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவே, பெண் தன்மை கொண்டவர்கள், ஆண் தன்மையோடு சேரும் போது, அவர்களை ‘அலி’ என்ற பெயரில் அழைத்தார்கள்.

- Advertisement -

அறிவியல் ரீதியாக நம் உடலில் இருக்கக்கூடிய குரோமோசோம்களின் சேர்க்கையால் ஏற்படுகின்ற மாற்றத்தின் மூலமாக, பிறக்கின்ற மூன்றாவது பாலினம் தான், இந்த அரவாணிகள். ஆண் குழந்தை எப்படி பிறக்கிறதோ, பெண் குழந்தை எப்படிப் இருக்கின்றதோ, அதே போல் தான் இந்த திருநங்கையர்களின் பிறப்பும், திரு நம்பிகளின்பிறப்பும்! அவர்கள் பிறக்கும் போது, எந்த வித்தியாசமும், அவர்களுடைய உடலில் தெரிவது இல்லை. அவர்கள் வளர்ந்து தங்களுடைய 12 வயதை தாண்டும் போது தான், வித்தியாசத்தை உணர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

aravanigal4

இப்படியாக, திருநங்கையர்களின் ஜனனம் என்பது பாவப்பட்ட ஜென்மம் அல்ல. தங்களது பன்னிரண்டாவது வயதிலிருந்து ஏற்படக்கூடிய மாற்றத்தை அவர்கள் வெளிப்படுத்தும்போது, முதலில் தங்களுடைய பெற்றோர்களால் நிராகரிக்கப் படுகிறார்கள். வெறுக்கப் படுகிறார்கள். தங்கள் பெற்றவர்களாலேயே, தங்களுடைய பிரச்சினையை புரிந்து கொள்ள முடியவில்லையே, என்ற பாதிப்பு அவர்களுடைய மனதில் ஆழமாக விழத் தொடங்குகிறது.

தங்களுடைய உறவினர்களால், தங்களுடைய தாய் தந்தையர்களினால், வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு, இந்த சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு, தங்களுடைய வாழ்க்கையை வாழக் கூடியவர்கள் தான் இந்த திருநங்கைகள். இவர்களில் எல்லோரையும் பொதுப்படையாக கெட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

aravanigal5

இவர்களுடைய பிறப்பின் இயல்பே, தங்களை முழு பெண்ணாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான். அந்த மாற்றத்திற்காக செய்யக்கூடிய ஒரு விஷயம்தான் அறுவை சிகிச்சை. ஒரு பெண் பூப்படைவதற்கு சமமான, ஒரு விஷயமாக சொல்லப்படுவது தான், திருநங்கையர்களுடைய சமூகத்தில், இந்த அறுவை சிகிச்சை என்பது!

அவர்களுடைய சமூகத்தில் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயத்தைத் தான் நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். அடுத்தவர்களுடைய சூழ்நிலையை நாம் என்றைக்குத் தான் புரிந்து கொண்டிருக்கின்றோம்? இதை மட்டும் புரிந்து கொள்ள!

வீட்டை விட்டு வெளியே வரும் இவர்கள், அரவாணிகள் கூட்டத்தில் சேர்ந்து, அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அரவாணிகளால், அரவணைக்க பட்டு, தங்களுக்கென்று, சொந்தங்களை உருவாக்கிக் கொண்டு, தங்களுடைய வாழ்க்கையை வாழத் தொடங்கி விடுகிறார்கள்.

aravanigal6

இப்படியாக அவர்களுடைய வாழ்க்கையை, அவர்கள் போக்கில் வாழ தொடங்கும் அரவாணிகளை, இந்த சமூகம் நல்ல முறையில் வாழ விடுகிறதா? ‘இவர்கள் இப்படித்தான்!’ என்று, சொல்லிச் சொல்லியே, அவர்களது மனதை காயப்படுத்தி, அவர்களை தவறான பாதையில் திசைதிருப்பி விடுகிறது.

திருநங்கையர்கள், தவறான முறையில் நடந்து கொள்வதற்கு, மொத்தமாக இந்த மனித சமூகம் தான் காரணமா? என்ற கேள்வி நம்முடைய மனதில் எழலாம்? அதாவது ஒருவருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நம்மால் காரணமாக இருக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களை திட்டி, தகாத வார்த்தைகளால் பேசி, அவர்கள் தவறான பாதைக்கு செல்வதற்கு, எந்த காரணத்தை கொண்டும் நாம் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு.

aravanigal7

‘இந்த சமூகத்தில், திருநங்கையர்கள் செய்யக்கூடிய செயல்கள் மட்டும் சரியான முறையில் அமைந்து விடுகிறதா?’ என்ற கேள்வி கட்டாயம் இந்த இடத்தில் எழத்தான் செய்யும். ‘கடைகளில் வந்து காசு கேட்டு தொந்தரவு செய்கிறார்கள், பொதுஇடங்களில் பணம் கேட்டு பிரச்சனை செய்கிறார்கள், அனாவசியமாக அடுத்தவர்களை திட்டுகிறார்கள்!’ இவை எல்லாம் சரிதானா? கட்டாயம் சரி இல்லை தான்!

அரவாணிகளுக்கான, சரியான, அங்கீகாரம் கிடைக்கப் பெற்று, நல்ல வேலை கிடைத்து, நல்ல ஆதரவு கிடைத்து, நல்ல வழியில் செல்லும் திருநங்கைகள் எத்தனையோ பேர், வாழ்க்கையில் பெரிய அளவில் சாதித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாத, சரியான ஆதரவு கிடைக்க படாத, அரவாணிகளின் மன நிலைமை, பணத் தேவைக்காக, தங்களுடைய வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காக, தங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதிகப்படியான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். (எல்லோரும் சேர்ந்து, ஒருவரை தொடர்ந்து நிராகரித்தால், அவர் ஆணாக இருந்தாலும், அவர் பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கும் கட்டாயம் கோபம் வரத்தானே செய்யும். அப்படித்தான் அரவாணிகளுக்கு வரக்கூடிய கோபமும்.)

Arthanareswarar

ஆன்மீக ரீதியாக சொல்லப் போனால், இவர்கள் அர்த்தநாரீஸ்வரரின் அம்சம் என்று சொல்லப்படுகின்றது. இவர்களது கையால் திருஷ்டி சுற்றி போட்டாலும், நமக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் முழுமையாக நீங்கிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்களிடம் காசை கொடுத்து, அவர்கள் மனதார வாழ்த்தினாலும், அது நமக்கு பெரிய ஆசீர்வாதம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

புதியதாக ஏதாவது ஒரு தொழிலை தொடங்கும் போது, அந்த இடத்தில் திருநங்கைகளை அழைத்து, அவர்கள் கையில் பணத்தைக் கொடுத்து, திருஷ்டி கழிக்க செய்வார்கள், அவர்களது வாயால் வாழ்த்த சொல்லுவார்கள்! என்பதை நம்மில் பலபேர் கண்கூடாக பார்த்து இருப்போம் அல்லவா? இப்படியாக, அவர்கள் கொடுக்கும், ஆசிர்வாதம் நமக்கு நன்மையைத் தரும் என்றால், அவர்கள் கொடுக்கும் சாபம் மட்டும் பலிக்காமல் இருக்குமா என்ன? சாபத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டா?

aravanigal8

பொதுவாகவே, யாருடைய மனதை புண்படுத்தினாலும், அதற்கான பலனை நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டு, பல இன்னல்களைக் கடந்து, மனம் வருந்தி இருக்கும், இவர்களது மனம் புண் படாதபடி நடந்துகொள்ள வேண்டும் என்பதே மனித இயல்பாக சொல்லப்பட்டுள்ளது.

இனி வரும், நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு திருநங்கைகளைப் பற்றிய தெளிவான விளக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. ஆண், பெண் போன்று தான், மூன்றாவது பாலினமும் உள்ளது. அவர்கள்தான் அரவாணிகள், திருநங்கையர்கள் என்று, மரியாதையோடு, இவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரக்கூடிய கடமை நம் ஒவ்வொருவரிடத்திலும் உண்டு என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அஞ்சறைப்பெட்டியில் ‘காசை’ மட்டும் ஒளித்து வைத்தால் போதுமா? அஞ்சறைப்பெட்டியும் அதன் ரகசியமும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.