சரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்

saraswathi-sabam

சத்தியலோகத்தில் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் மகரிஷிகள் பலரும் கூட்டமாய் உட்கார்ந்து வேத பாராயணம் செய்வது வழக்கம். ஒருமுறை இப்படி வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தபோது, அதில் ஈடுபட்ட துர்வாச முனிவருக்கு ஓரிடத்தில் ஸ்வரம் பிசகிவிட்டது. அதைக் கேட்டு வாக் தேவியான சரஸ்வதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. கோபக்காரரான துர்வாசர், வாக்தேவி `சுளுக்’கென்று சிரிக்கவும் சினமடைந்தார்.

munivar

வேதத்தில் எவ்வளவு பெரிய சமர்த்தர்களாக இருந்தாலும் சில சமயங்களில், அவர்களுக்கும் ஸ்வரம் பிசகிப் போய்விடுவது இயல்புதான். வாக்குகளுக்கெல்லாம் தேவதையான நீ இதை அறிந்தும்கூட என்னைப் பார்த்துப் பரிகாசமாகச் சிரித்ததால் பூவுலகில் மானிடப் பெண்ணாகப் பிறப்பாயாக!” என்று சாபம் கொடுத்தார் துர்வாசர்.

இந்து தர்மத்தை ஒருங்கிணைத்து கட்டிக்காக்கும் பொருட்டு ஆதிசங்கர பகவத்பாதாள் பூவுலகில் அவதரித்த காலம் அது.

முருகப்பெருமான் வேதாந்தக் கோட்பாடுகளை நிலைநாட்டும் பொருட்டு குமரிலபட்டர் என்ற பெயரில் அவதரித்திருந்தார்.

lord murugan

- Advertisement -

துர்வாசரின் சாபத்துக்கு இணங்க சரஸ்வதி தேவி ஸோனா நதிக்கரையில் விஷ்ணுமித்திரர் என்பவரின் மகளாகப் பிறந்தாள்.
பிரம்மதேவர் மண்டனமிஸ்ரர் என்ற பெயரில் அவதரித்து, குமரிலபட்டரின் முதன்மையான சீடராக விளங்கி வந்தார்.

விஷ்ணுமித்ரரின் பெண்ணாகப் பிறந்த வாக்தேவியை மண்டனமிஸ்ரர் மணம் புரிந்துகொண்டார். கர்ம காண்டக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதில் தீவிரத்துடன் ஈடுபட்டு வந்தவர் குமரிலபட்டர். ஆதிசங்கரர் ஞானகாண்டத்தின் கோட்பாடுகளைப் பரப்பி வந்த தருணத்தில், குமரிலபட்டர் பிற மதங்களின் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் வேதாந்த மதமே உயர்வானது என்பதை நிலைநாட்டவும், சில காலம் அந்தந்த மதங்களைத் தழுவியிருந்தார்.

saraswathi

பிற மதங்களைத் தழுவியிருந்ததற்காக, தமக்குத்தாமே தண்டனை விதித்துக்கொள்ள முடிவு செய்த குமரிலபட்டர், தம்மைச் சுற்றிலும் உமியைக் குவித்து அதற்குத் தீ வைத்துக்கொண்டார். நெருப்பு சிறுகச்சிறுக அவரது உடலைப் பொசுக்கிக் கொண்டிருந்த தருணத்தில், ஆதிசங்கரர் குமரிலபட்டருடன் வாதம் செய்ய வந்தார். தீயில் தம்மைப் பொசுக்கிக்கொண்டிருந்த குமரிலபட்டர், தம்முடைய சீடரான மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்யும்படிக் கூறிவிட்டார்.

ஆதிசங்கரரும் மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்வதில் ஈடுபட்டார். வாதத்தில் ஆதிசங்கரர் தோற்றால் அவர் மண்டனமிஸ்ரரைப் பின்பற்றி கிருகஸ்தராகிவிட வேண்டும் என்றும், மண்டன மிஸ்ரர் தோற்றால் அவர் ஆதிசங்கரரைப் போல் துறவறம் மேற்கொண்டு சங்கரரின் சீடராகிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துக் கொண்டார்கள். விவாதத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பொறுப்பை கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய வாக்தேவியான மண்டனமிஸ்ரரின் மனைவியிடமே ஒப்படைத்தார்கள்.

athi sankarar

விவாதத்தைக் கேட்டுக்கொண்டு நான் உட்கார்ந்திருந்தால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியாமல் போய்விடும். உங்களுக்கு உணவு சமைக்கவும் முடியாது. அதனால் உங்கள் இருவருக்கும் இரண்டு மலர் மாலைகளை அளிக்கிறேன். மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு விவாதத்தைத் தொடங்குங்கள். யார் கழுத்தில் உள்ள மலர் மாலை வாடுகிறதோ அவர்கள் விவாதத்தில் தோற்றுவிட்டதாகக் கொள்ளவேண்டும்” என்று கூறி இரண்டு மாலைகளை அளித்தாள், வாக்தேவி. இருவருக்கும் நடுவராக இருந்த அவளுக்கு ‘உபயபாரதி’ என்ற பெயர் உண்டாயிற்று.

விவாதம் நடந்த நாள்களில், உணவு தயாரானதும் கிருகஸ்தரான தன் கணவரைப் பார்த்து, “வைஸ்வ தேவத்திற்கு வாருங்கள்” என்றும், துறவியான ஆதிசங்கரரைப் பார்த்து “பிட்சை ஏற்க வாருங்கள்” என்றும் அழைப்பது வழக்கம். இல்லறத்தில் இருப்பவர்களை உணவுக்கு அழைக்கும்போது ‘வைஸ்வ தேவம்’ ஏற்க வருமாறும், துறவிகளை அதற்கென அழைக்கும்போது ‘பிட்சை’ ஏற்க வருமாறும் அழைப்பது மரபு.

munivar

விவாத இறுதியில் மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மலர்மாலை வாடிவிட்டது. அன்று மதிய உணவின்போது உபய பாரதி கணவரையும், ஆதிசங்கரரையும் உணவு அருந்த அழைத்தபோது, இருவரையுமே ‘பிட்சைக்கு வாருங்கள்’ என்று அழைத்து, தன் கணவர் மண்டனமிஸ்ரர் விவாதத்தில் தோற்றுவிட்டார் என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்!

அதன் பிறகு சங்கரர் தன்னையும் விவாதத்தில் வென்றால்தான் அவரது வெற்றி முழுமை பெறும் என்று கூறினாள்.

“மனைவி என்பவள் கணவனின் சரிபாதியானவள். எனவே, நீங்கள் என்னையும் விவாதத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்” என்று அதற்குக் காரணமும் கூறிய உபயபாரதி, இல்லறம் தொடர்பான விஷயங்களை விவாதப் பொருளாக்கி விடவே, துறவியான ஆதிசங்கரர் தகுந்த விளக்கம் அளிப்பதற்காக இரண்டு மாதம் தவணை பெற்று அமருகன் என்ற அரசனின் உடலில் பரகாயப்பிரவேசம் செய்து மீண்டு வந்தார். விவாதம் தொடர்ந்தது. இறுதியில் ஆதிசங்கரர் வெற்றி பெற்றார்.

Athi sankarar

தோல்வியடைந்த வாக்தேவி உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தினால் பந்தனம் செய்து தன் பின்னால் வரச் செய்து புறப்பட்டார். `பின்னால் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னால் வருவேன். எங்காவது திரும்பிப் பார்த்து விட்டீர்களானால் நான் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்’ என்று வாக்தேவி விதித்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் ஆதிசங்கரர். இருவரும் ஒருவர் பின் ஒருவராக வழிநடந்து, விபண்டக மகாமுனி என்பவரின் ஆசிரமத்தின் வழியாக துங்கா நதி தீரத்தையொட்டிச் சென்றனர். சித்திரை மாதத்து உச்சி வேளைப் பொழுதான அந்தச் சமயத்தில் வெயிலில் சூடேறிய மணலில் கருவுற்ற தவளையொன்று தவித்திருக்க, அதற்கு நிழல் கொடுத்து உதவும் பொருட்டு, ஒரு நாகம் தன் படத்தைத் தூக்கிக் குடையாகக் கவித்து வைத்திருப்பதைக் கண்டார், ஆதிசங்கரர்.

snake

ஒன்றுக்கொன்று பகையான இருபிராணிகள் இப்படி ஒற்றுமையுடன் இணைந்திருக்கும் விசித்திரத்தைக் கண்ட ஆதிசங்கரர், அந்த இடத்தின் மகிமையால்தான் அவை இவ்வாறு பகை உணர்வு மறைந்து வாழ முடிகிறது என்பதைப் புரிந்துகொண்டார். வாக்தேவியை ஸ்தாபிக்க இந்த இடமே பொருத்தமான இடம் என்று முடிவு செய்து, பின்னால் திரும்பிப் பார்த்தார். உடனே, அவரைப் பின் தொடர்ந்து வந்த வாக்தேவி சிலையென நின்றுவிட்டாள். அதுவரை ‘ஜல்ஜல்’ என்று ஒலித்து வந்த அவளது கால் சலங்கைகளின் சப்தம் நின்றுவிட்டது. ஆதிசங்கரர் ஶ்ரீசக்கரம் ஒன்றை அங்கு நிறுவி, வாக்தேவியை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். வாக்தேவிக்கு ஶ்ரீசாரதாம்பிகை என்ற திருநாமம் சூட்டி, சிருங்கேரியில் தாம் நிறுவிய திருமடத்தின் அன்றாட வழிபாட்டுத் தெய்வமாக பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர்.

தமிழ் கதைகள், ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சமபந்தமான பல விடயங்களை ஒரே இடத்தில பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.