பண்டிகை நாட்கள் வந்து விட்டால், இந்த இனிப்பு பலகாரங்கள் செய்வதில் வீட்டு பெண்களுக்கு ஆர்வம் அதிகரித்து விடும். அதுவும் நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தி. கண்ணனுக்கு மிகவும் பிடித்த நெய் அப்பம் இன்ஸ்டன்டாக நம்முடைய வீடுகளில் எப்படி செய்யலாம் என்பதை பற்றிய சமையல் குறிப்பு இது. இந்த இனிப்பு பலகாரம் நெய் வாசத்தோடு கண்ணனுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். மன திருப்தியோடு நாளைய தின கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட இந்த ரெசிபி உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் பதிவை படித்து நெய் அப்பம் எப்படி சுடுவது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வச்சுக்கோங்க. அதில் 250ml தண்ணீர் ஊற்றி, 250 கிராம் வெல்லத்தை நசுக்கி போட்டு, கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் பாகு பதம் வர தேவையில்லை. வெல்லம் தண்ணீரில் கரைந்து கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதை அப்படியே ஆறவிட்டு விடுங்கள்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் தோலுரித்த பழுத்த வாழைப்பழம் மூன்று, கோதுமை மாவு 200 கிராம், அரிசி மாவு 100 கிராம், ஏலக்காய் 4 போட்டு, ஆற வைத்திருக்கும் வெல்லம் கரைசலை இதில் ஊற்றி மிக்ஸி ஜாரை ஓட விடுங்கள். எல்லா மாவும் ஒன்றாக சேர்ந்து ஓரளவுக்கு கெட்டியான பக்குவத்தில் அரவை கிடைத்திருக்கும். இதை அப்படியே ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி விடவும். (இந்த மாவு ரொம்பவும் திக்காகவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் தண்ணீராகவும் இருக்கக் கூடாது. மாவு ரொம்பவும் கட்டியாக இருந்தால் தேவைக்கு ஏற்ப கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை கரைத்துக் கொள்ளலாம். ரொம்பவும் மாவு நீர்க்க இருந்தால் கோதுமை மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து கரைக்கவும்.)
அரைத்து வைத்திருக்கும் இந்த மாவில், எள்ளு 1 ஸ்பூன், ஆப்ப சோடா 3 சிட்டிகை, உப்பு 2 சிட்டிகை, போட்டு மாவை நன்றாக கலந்து விடுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி நறுக்கிய தேங்காய் பத்தைகளை நெய்யில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, அரைத்து வைத்திருக்கும் மாவில் கொட்டி விடுங்கள். மீண்டும் மாவை ஒரு முறை கலந்து விட்டால் அப்பம் செய்ய மாவு தயார்.
இப்போ அப்பம் சுட வேண்டிய வேலை தான். குழிப்பணியார சட்டையை அடுப்பில் வைத்து, அது காய்ந்ததும் நெய் ஊற்றி சூடானதும் ஸ்பூனால் இந்த மாவை எடுத்து குழிப்பணியார கல்லில் ஊற்றி மிதமான தீயில் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான நெய் அப்பம் தயார். உங்க வீட்டில் இருப்பவர்கள் நெய்யப்பம் விரும்பி சாப்பிட மாட்டாங்களா. இதை எண்ணெயிலும் பொறித்து எடுக்கலாம். ஆனால் சுவாமிக்கு நெய் ஊற்றி அப்பம் சுட்டு வைப்பதில் தானே சிறப்பு. உங்களுக்கு எப்படி தேவையோ அப்படி சுட்டுக்கோங்க.
இதையும் படிக்கலாமே: நாளை கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக பஞ்சு போல சாப்டான இந்த ரவை அப்பத்தை செஞ்சு பாருங்க. கிருஷ்ண ஜெயந்தி போலவே இந்த அப்பமும் ரொம்பவே ஸ்பெஷலா இருக்கும்.
ஆக மொத்தத்தில் இதனுடைய வாசமும் சுவையும் தெய்வீகத் தன்மையை கொண்டிருக்கும். அந்த இறை ஆற்றலை ஈர்த்துக் கொண்டு வந்து பூஜை அறையில் நிறுத்தி இறைவனுக்கு நிவேதனம் வைத்த திருப்தியை கொடுக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா நாளைக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று ட்ரை பண்ணி பாருங்க.