செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக நாம் பல வழிமுறைகளை பின்பற்றுவோம். அதோடு சேர்த்து வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்வோம். செல்வ செழிப்பு அதிகரிப்பதற்காகவே சில பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கும் பழக்கம் என்பது இருக்கும். அதுவும் குறிப்பாக மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களை வாங்கி வைப்பது என்பது இன்றளவும் பலரும் மேற்கொள்கிறார்கள். அப்படி வாங்கி வைக்கக் கூடிய பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் வலம்புரி சங்கு. அப்படிப்பட்ட வலம்புரி சங்கை புரட்டாசி மாதத்தில் எப்படி வழிபட்டால் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வலம்புரி சங்கு வழிபாடு
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. பெருமாள் வழிபாட்டிற்கு என்றே உரித்தான மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது. அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தில் பலரும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்வார்கள். அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். மேலும் சனிக்கிழமை தோறும் ஒரு பொழுது விரதம் இருந்து பெருமாளை கோவிந்தா நாமம் சொல்லி அழைத்து வீட்டில் படையல் இட்டு வழிபாடு செய்யும் வழக்கமும் பலருக்கும் இருக்கிறது. காக்கும் தெய்வமாக திகழக்கூடிய பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பெருமாள் நமக்கு கொடுத்து நம்மை காத்து ரட்சிப்பார் என்பது பொருள்.
அப்படிப்பட்ட பெருமாளின் கையில் இருக்கக்கூடிய சங்கு சக்கர வழிபாடு என்பது மிகவும் விசேஷமான ஒன்று. இதில் சங்கு என்பது செல்வவளத்தை அதிகரிக்க கூடிய பொருளாக திகழ்கிறது. சக்கரம் என்பது எதிர்மறை ஆற்றல்களை விலகக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. சங்கு செல்வ வளத்தை அதிகரிக்கும் என்பதற்கு மிகவும் முக்கியமான காரணம் என்னவென்றால் சங்கு பிறக்கும் இடம் கடல். மகாலட்சுமியும் கடலில் பிறந்தாள் என்பதால் மகாலட்சுமிக்கு இணையாக சங்கையும் நாம் வழிபாடு செய்யலாம்.
பலரும் தங்களுடைய இல்லத்தில் வலம்புரி சங்கை வாங்கி வைத்து இருப்பதை பார்த்திருப்போம். இந்த வலம்புரி சங்கை வைப்பதற்குரிய வழிமுறைகள் பல இருக்கின்றன. வழிபாட்டு முறைகளும் பல இருக்கின்றன. அவற்றை முறையாக செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வீட்டில் வலம்புரி சங்கு வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை தெரிந்து கொள்வோம்.
புதன்கிழமை, சனிக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து நல்ல நேரம் பார்த்து இந்த வழிபாட்டை செய்யுங்கள். வலம்புரி சங்கை எடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக சுத்தமான பசும்பாலை ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். மறுபடியும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். கடைசியாக கடைசியாக பன்னீரை ஊற்றி அபிஷேகம் செய்து சங்கிற்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
பாலால் அபிஷேகம் செய்யும் பொழுது மட்டும் அந்த பாலை தனியாக சிறிது சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அபிஷேகம் அனைத்தும் நிறைவடைந்த பிறகு வெள்ளை நிற மலர்களால் “ஓம் நமோ நாராயணாய நமஹ, ஓம் மஹாலட்சுமியே நமஹ” என்னும் மந்திரத்தை 21 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் சங்கிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு சாம்பிராணி தூபம் காட்டி கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால் அபிஷேகம் செய்த பாலை தனியாக எடுத்து வைத்திருக்கிறோம் அல்லவா அந்த பாலை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பருக தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் நமக்கு ஞானம் பெருகும். செல்வ வளம் உயரும். நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: வீண் விரயம் மற்றும் கடன் தீர புரட்டாசி மாத வழிபாடு
வலம்புரி சங்கை வாங்கி வைத்தால் மட்டும் போதும் என்று அப்படியே விட்டுவிடாமல் பெருமாளுக்கு உரிய மாதத்தில் இந்த முறையில் வழிபாடு செய்ய பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று செல்வ வளத்துடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.