ஒவ்வொரு மாதத்திலும் வாராகி அம்மனுக்கு உகந்த திதியான பஞ்சமி திதி என்பது வரும். அதுவும் வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி என்று இரண்டு விதங்களில் வரும். நம் வாழ்க்கை வளமாவதற்கு வளர்பிறை பஞ்சமி அன்று நாம் வாராகி அம்மனை வழிபட வேண்டும் என்றும் நம்முடைய கஷ்டங்கள் தேய்வதற்கு தேய்பிறை பஞ்சமி நாளன்று வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் மே மாதம் இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வளர்பிறை பஞ்சமி வருகிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு தீப வழிபாடு வாராகி அம்மனின் அருளையும் குலதெய்வத்தின் அருளையும் பெற உதவும். அந்த தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வளர்பிறை பஞ்சமி தீப வழிபாடு
சித்திரை மாதத்தின் வளர்பிறை பஞ்சமி என்பது மே மாதம் முதல் நாள் மாலை 4:50 மணிக்கு ஆரம்பித்து மே மாதம் இரண்டாம் தேதி மாலை 3:16 மணி வரை இருக்கிறது. அதனால் பஞ்சமி வழிபாட்டை மே மாதம் 1ம் தேதி அன்றும் செய்யலாம் மே மாதம் இரண்டாம் தேதி அன்றும் செய்யலாம். மே மாதம் எட்டாம் தேதி என்பது வெள்ளிக்கிழமை என்பதால் வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய தீப வழிபாடு வாராகி அம்மனின் அருளையும் குலதெய்வத்தின் அருளையும் பெற உதவும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்பொழுது தீபம் ஏற்றுகிறீர்களோ அதற்கு முன்பாக வீட்டு நிலை வாசலை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களை சாற்றி வழிபாட்டை செய்ய வேண்டும். பிறகு ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், இரண்டு சிட்டிகை குங்குமத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து திரியாக போட்டு நிலை வாசலின் வலது பக்கத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.
நிலை வாசலின் இரண்டு புறங்களிலும் தீபம் ஏற்றும் வழக்கம் இருப்பவர்கள் இதே முறையில் இரண்டு புறங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது முழுமனதோடு வாராகி அம்மனையும் குலதெய்வத்தையும் நினைத்து வீட்டில் செல்வங்கள் சேர வேண்டும், சிறப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டே ஏற்ற வேண்டும். இந்த தீபம் குறைந்தது 48 நிமிடமாவது எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை குளிர வைத்து விடுங்கள். ஆனால் அகல் விளக்கை அங்கு இருந்து அப்புறப்படுத்த கூடாது.
அன்று இரவு வரை நிலை வாசலிலேயே இந்த அகல் விளக்கு இருக்க வேண்டும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக அகல் விளக்கை எடுத்து வைத்துவிட்டு அந்த தட்டில் இருக்கக்கூடிய மஞ்சள் குங்குமம் கலந்த தண்ணீரை வீட்டு வாசலில் எந்த இடத்தில் கோலம் போடுவோமோ அந்த இடத்தில் ஊற்றி விட வேண்டும். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் குலதெய்வம் மற்றும் வாராகி அம்மனின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும். வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகி ஓடும்.
இதையும் படிக்கலாமே:கடன் தீர உப்பு பரிகாரம்
நிலைவாசல் பூஜை என்பது குலதெய்வத்திற்கும் அஷ்டலஷ்மிகளுக்கும் உரிய பூஜை ஆக கருதப்படுகிறது. வளர்பிறை பஞ்சமி நாளில் நிலை வாசலில் இந்த முறையில் தீபம் ஏற்றும் பொழுது அஷ்டலட்சுமிகளோடு குலதெய்வத்தின் அருளையும் வாராகி அம்மனின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.