இந்த வெயில் காலத்திற்கு என்ன தான் விதவிதமாக உணவு செய்து வைத்தாலும் கூட, கடைசியாக கொஞ்சம் தயிர் சேர்த்து சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். சிலருக்கு எப்போதுமே கொஞ்சம் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உண்டு. அந்த தயிர் சாதத்தை ரொம்ப வித்தியாசமாக அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியமாகவும் எப்படி செய்கிறது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் செய்து கொள்ளலாம்.
அரிசி சேர்க்காத தயிர் சாதம் என்றவுடன் அரிசி சேர்க்காமல் எப்படி சாதம் என அனைவருக்கும் தோன்றுவது இயல்பு தான். சிறுதானியத்தில் ஒன்றான வரகை வைத்து தான் இப்போது இந்த தயிர் சாதம் செய்ய போகிறோம். இந்த வெயில் நேரத்தில் தயிர் சாதமே உடலுக்கு மிகவும் நல்லது தான். அதிலும் இந்த வரகு தானியத்தில் செய்யும் போது இன்னுமே ஆரோக்கியம் அதிகரிக்கும்.
செய்முறை
இந்த தயிர் சாதம் செய்வதற்கு முதலில் ஒரு கப் வரகை தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் குக்கர் வைத்து அதில் சுத்தம் செய்த ஒரு கப் வரகை சேர்த்து அதற்கு மூன்று கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு ஒரு மூன்று விசில் வரும் வரை விட்டு அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். வரகு சீக்கிரம் வெந்து விடக் கூடிய தானியம். எனவே இதை ஊற வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
இப்போது விசில் இறங்கிய பிறகு குக்கர் மூடியை திறந்து வரகை நன்றாக கரண்டி வைத்து குழைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கப் பால் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு மீண்டும் கால் கப் பால் சேர்த்து கலந்து விடுங்கள்.
இப்போது இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை, உப்பு இவை அனைத்தையும் பொடியாக அரிந்து அதில் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்த பிறகு கால் கப் கெட்டியான அதிகம் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொழுது காலையில் செய்தால் இரவு வரை கூட இந்த தயிர் சாதம் புளிக்காமல், செய்யும் பொழுது எப்படி இருந்ததோ அதே போலவே இருக்கும்.
தயிர் சாதம் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள் அல்லது பால் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். கடைசியாக அடுப்பை பற்ற வைத்து தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு ஸ்பூன் உளுந்தையும் சேர்த்த பின் இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
அதன் பிறகு கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கலந்த பிறகு தாளிப்பை தயிர் சாதத்தில் ஊற்றி கலந்து விடுங்கள். இதற்கு மேல் கொஞ்சமாக கொத்துமல்லி தழைகளை தூவி மூடி வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: கேரளத்து பலா சுளை அடையை சாப்பிட்டு இருக்கீங்களா? ஒருமுறை இதை வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்க. இதன் சுவை நாவில் அப்படியே ஒட்டிக்கொள்ளும்.
நல்ல வாசத்துடன் ஆரோக்கியமான தயிர் சாதம் தயார். இது போன்ற தானிய வகைகளை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயமாக நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அப்படியே செய்து கொடுத்தால் கட்டாயமாக இதை எல்லாம் சாப்பிட மாட்டார்கள். இது போன்று செய்து கொடுத்தால் இது வரகு தானியத்தில் தான் செய்தது என்று அவர்களுக்கு தெரிய கூட செய்யாது. நிச்சயம் சாப்பிட்டு விடுவார்கள்.