ஃபிரைட் ரைஸ் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி வீட்டிலேயே காய்கறி சாதம் செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்

veg-pulao
- Advertisement -

காய்கறிகளை தனியாக சமைத்துக் கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி சாதத்துடன் சேர்த்து காய்கறிகளை கிளறி காய்கறி சாதம் செய்து கொடுத்து பாருங்கள். இதனை விருப்பமாக சாப்பிட்டு முடிப்பார்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு காய்கறி மட்டும் பிடிக்கும், தாதம் பிடிக்காது. ஒரு சில குழந்தைகள் சாதத்தை சாப்பிட்டு விட்டு, காய்கறியை அப்படியே மிச்சம் வைத்து விடுவார்கள். ஆனால் ஒரு சில காய்கறிகளை எண்ணெயில் சேர்த்து ஃப்ரை செய்து கொடுத்தால், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் ஃப்ரைட் ரைஸ். எனது இந்த ஃப்ரைட் ரைஸை வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். நீங்கள் எந்த அளவிற்கு அதிகமாக செய்தாலும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இந்த காய்கறி சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப், கேரட் – 1, பீன்ஸ் – 50 கிராம், குடைமிளகாய் – ஒன்று, முட்டைகோஸ் – 100 கிராம், பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், கிராம்பு – 2, பட்டை சிறிய துண்டு – ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, ஏலக்காய் – ஒன்று, தக்காளி சாஸ் – 2 ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், சர்க்கரை – அரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு கப் சாதத்தை சற்று விரைப்பாக வடித்து வைக்க வேண்டும். பின்னர் கேரட், பீன்ஸ், குடை மிளகாய் மற்றும் முட்டைகோஸ் இவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் நன்றாக சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு காய்கறிகள் நன்றாக வெந்ததும் இவற்றுடன் தக்காளி சாஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இவ்வாறு சாதத்தை 5 நிமிடம் நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான காய்கறி சாதம் தயாராகிவிடும்

- Advertisement -