சுவையான வெண்டைக்காய் பச்சடி இப்படி எளிதாக ஒருவாட்டி செஞ்சு பாருங்க, அடிக்கடி இனி உங்கள் வீட்டில் வெண்டைக்காய் வாங்க வேண்டி வரும்!

vendakka-pachadi1
- Advertisement -

வெண்டைக்காய் ஞாபக சக்திக்கு நல்ல ஒரு காய்கறியாக இருக்கிறது. பசுமையான இத்தகைய காய்கறிகள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு எப்போதும் பக்க பலமாக இருந்து வருகிறது. வெண்டைக்காயில் இருக்கும் வழவழப்பு தன்மை காரணமாக பலரும் இதை புறக்கணித்து வருகிறார்கள். வெண்டைக்காயில் இருக்கும் வழவழப்பு தன்மை நீங்க என்ன செய்ய வேண்டும்? சுவையான வெண்டைக்காய் பச்சடி எப்படி எளிதாக செய்வது? என்பது போன்ற குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வெண்டைக்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 200 கிராம், துவரம் பருப்பு – 75 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4, கருவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – 2, புளி – சிறு எலுமிச்சம் பழம் அளவிற்கு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

வெண்டைக்காய் பச்சடி செய்முறை விளக்கம்:
வெண்டைக்காய் பச்சடி செய்வதற்கு முதலில் சிறிய எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதை அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். 75 கிராம் அளவிற்கு துவரம் பருப்பை எடுத்து கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் ஊறியதும் குக்கரில் போட்டு இரண்டு விசில் விட்டு எடுங்கள். பருப்பு ரொம்பவும் குழைந்து விடக்கூடாது. பூ போல வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து பொடி பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து முதலில் அதன் வழவழப்பு தன்மை போக லேசாக சிம்மில் வைத்து வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு வதக்குங்கள். வெண்டைக்காய் வேக நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வாணலியை கீழே இறக்கிக் கொள்ளுங்கள். வேறு ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

- Advertisement -

கடுகு பொரிந்து வந்ததும் உளுந்தம் பருப்பு மற்றும் சீரகம் தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை, நான்கு பச்சை மிளகாயை கீறி சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காய துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கி வரும் சமயத்தில் தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும். இவை வேகுவதற்கு தேவையான அளவிற்கு கொஞ்சம் கல் உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளி இரண்டும் மசிய வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து, லேசாக பச்சை வாசம் போக வதக்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு நீங்கள் குக்கரில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் நீங்கள் ஊற வைத்துள்ள புளியை கரைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் சேர்க்கக் கூடாது. இவை கொதித்து கெட்டியாக வரும் பொழுது நீங்கள் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய்களை சேர்த்து, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து திரண்டு வர ஐந்து நிமிடம் நன்கு வதக்கி விடுங்கள். அவ்வளவுதான் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லா விதமான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும், இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -