இந்த உலகத்தை காத்து ரட்சிக்கக்கூடிய தெய்வங்களும் ஒருவராக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்று என்றாலும் முழுமனதோடு முருகப்பெருமானை சரணாகதி அடைந்து யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் நினைத்ததை விட பல மடங்கு உயர்வை பெறுவார்கள் என்று கூறலாம். அப்படிப்பட்ட முருகனை எந்த முறையில் வழிபட்டால் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வெற்றிகளை தரும் வேல் வழிபாடு
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒவ்வொருவரும் அந்த செயலை செய்ய ஆரம்பிப்போம். அவ்வாறு செய்யும் பொழுதோ செய்த பிறகோ நாம் செய்த செயலுக்குரிய பலனை பெற முடியவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவோம். ஒரு சிலருக்கு எளிதிலேயே வெற்றிகள் கிடைத்துவிடும். ஒரு சிலருக்கு அதிக அளவில் போராடி பிறகுதான் வெற்றி கிடைக்கும். இன்னும் சிலருக்கோ எவ்வளவு போராடினாலும் வெற்றிகளே கிடைக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேல் உறுதுணையாக இருந்து வெற்றிகளை வாரி வழங்கும்.
முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேல் ஒரு ஆயுதமாக கருதப்படுகிறது என்றாலும் அது பராசக்தியின் அம்சம் பொருந்தியது என்பதால் அதை நாம் வழிபாடு செய்யும் பொழுது பராசக்தியின் அருளும் அதேசமயம் முருகப்பெருமானின் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்தது நடக்கும் என்றே கூறப்படுகிறது அதனால் தான் இன்றைய காலத்தில் வேல் வழிபாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள். பலரும் பல விதங்களில் வேல் வழிபாட்டை செய்தாலும் மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி மிகுந்த ஒரு வேல் வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வேல் வழிபாட்டை நாம் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் செய்வது என்பது சிறப்பு. ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை முன்வைத்து 48 நாட்கள் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும், சஷ்டி தினத்தில், கிருத்திகை நட்சத்திரத்தில் செய்யலாம். எந்த நாளில் நாம் செய்வதாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யும்பொழுது அந்த வழிபாட்டிற்கு அதீத சக்தி உண்டாகும். இதற்கு நம்முடைய உள்ளங்கை அளவிற்கு ஒரு வேலை வாங்கிக் கொள்ள வேண்டும். வேலுக்கு தங்களால் இயன்ற அபிஷேகங்களை செய்யலாம். எதையும் செய்ய இயலாது என்னும் பட்சத்தில் வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றி அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கூட இந்த வழிபாட்டை செய்யலாம்.
அபிஷேகம் செய்து முடித்த பிறகு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு வேலிற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை வைத்துக் கொள்ளலாம். பிறகு முருகப் பெருமானின் அஷ்டோத்திரத்தை கூறியபடி அரளிப் பூவால் வேலிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை முன்வைத்து தொடர்ச்சியாக 48 நாட்கள் வேல்வழிபாட்டை செய்பவர்கள் 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்து கொள்ள வேண்டும். வேண்டுதல் நிறைவேறிய பிறகு வேலை முருகன் வீற்றிருக்கும் ஆலயத்தில் இருக்கும் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: திருமண யோகத்தை தரும் கந்தசஷ்டி விரதம்
முழு மனதோடு முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேலை இந்த முறையில் வழிபாடு செய்து விட்டு வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.