முருகனை போல் விநாயகருக்கும் இருக்கும் அறுபடை வீடுகள் எவை தெரியுமா ?

vinayagarin-arupadai-veedugall
- Advertisement -

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது உங்களுக்கு தெரியும். அவரின் அண்ணனான கணபதிக்கும் அறுபடை வீடுகள் இருப்பது தெரியுமா? ஓம்கார வடிவான கணபதிக்கும்  சிறப்பான ஆறு படை வீடுகள் இருக்கின்றன. அந்த ஆறுபடை வீடுகளையும் தரிசிக்கலாமே…

thiruvannamalai pillayar

கணபதியின் அறுபடை வீடுகளில் முதலாவதாகத் திகழ்வது திருவண்ணாமலை. அருணாசலேஸ்வரரின் ஆலயத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் வடக்கு பார்த்த சந்நிதியில் அருள்கிறார் வினை தீர்க்கும் விநாயகர். விவேக சிந்தாமணியில், ‘அல்லல் போம் வல்வினை போம்’ என்னும் பாடல் இவரைப் போற்றியே பாடப் பெற்றதாகும்.

- Advertisement -

திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுர விநாயகர், சிவகங்கை தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணைதிறை கொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் என பல விநாயகர் சந்நிதிகள் இருந்தாலும் இந்த வினைதீர்க்கும் விநாயகர் தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார்.  நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர் இந்த கணபதி.

viruthasalam pillayar

பிள்ளையாரின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக இருப்பவர், விருத்தாசலம் கோயில் நுழைவு வாயில் அருகே உள்ள ஆழத்து பிள்ளையார். விருத்தாசலத்தில் புகழ்பெற்ற பழமலை நாதர் திருக்கோயிலில் இவர் அமர்ந்து ஆட்சி புரிகிறார். முதல் வெளிப்பிராகாரத்தில் சுமார் 18 அடி ஆழத்தில் அமர்ந்து இருப்பவரே ஆழத்து பிள்ளையார்.

- Advertisement -

படிகளில் இறங்கி இவரை வழிபடலாம். கல்வியும் செல்வமும் அளிக்கும் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டு பழைமை கொண்டவர். சிவன் ஆலயத்தில் இருந்தாலும் இவருக்குத் தனி கொடிமரமும் தனியான விழாவும் நடத்தப்படுகிறது. எண்ணிய யாவையும் அருளும் இந்த ஆழத்து பிள்ளையார் இர்ண்டாவது படைவீட்டு நாயகராக அருள் புரிகிறார்.

virudhachalam pillayar

விநாயகரின் படைவீடுகளில் மூன்றாவதாக இருப்பது திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார். திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதியின் நந்திக்கு வலது புறம்  இந்த பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ளது. இது பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட சந்நிதி. அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் இந்த விநாயகரை வணங்கிப் பாடிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம் இவரது சிறப்பினைக் கூறும்.

- Advertisement -

கள்ளவாரண பிள்ளையார் தனது  துதிக்கையில் அமிர்தகலசம் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். அமிர்த கலசம் பெற்ற தேவர்கள் தம்மை வழிபட மறந்ததால், அமிர்த கலசத்தை இவர் மறைத்து விளையாடினார் என்பதால்தான் கள்ளவாரண பிள்ளையார் எனப்படுகிறார். செல்வ வளம், கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் போன்றவற்றை அருளும் கருணாமூர்த்தியாக கள்ளவாரண பிள்ளையார் காட்சியளிக்கிறார்.

madhurai pillayar

கஜானமூர்த்தியின் படைவீடுகளில் நான்காவதாக இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் நுழைவு மண்டபத்தில் வீற்றிருக்கும்  சித்தி விநாயகர் சந்நிதி. மீனாட்சி அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக இந்த கணபதி கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.

மாணிக்கவாசக பெருமான் பாண்டிய மன்னன் விருப்பப்படி குதிரை வாங்கச் செல்கையில் இந்த சித்தி விநாயகரை வணங்கி விட்டு  சென்றதாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவர் என்று அறியலாம்.  சகல காரியங்களிலும் வெற்றி அளிக்கும் சித்தி விநாயகராக இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும். அவப்பெயர் நீங்கும்.

dhundi ganapathi

வேழமுகத்தானின் படைவீடுகளில் ஐந்தாவதாக இருப்பது காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி சந்நிதி. காசி மஹாத்மியம் என்ற நூலை பாடி பரவசப்படும் கணபதி இவர். காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு முன்பு துண்டி கணபதியின் ஆலயம் உள்ளது. சிறிய கோயில் என்றாலும் புகழ் பெற்று உள்ளது. சிறிய தெருவில் கடைகளுக்கு இடையே கணபதி அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காணப்படுகிறார்.

இவருக்கு செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்வதால் இப்படி காட்சி அளிக்கிறார். பக்தர்கள் ‘துண்டி மகராஜ்’ என்று பரவசத்தோடு அழைக்கிறார்கள். காசிக்கு வருபவர்கள் இந்த கணபதியிடம் உத்தரவு பெறாமல் சிவனை வணங்கவோ, ஊரை விட்டுச் செல்லவோ கூடாது என்பது மரபு. ஞானத்தின் உருவான இவர் தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார். காசிக்க்ச் சென்று துண்டி பிள்ளையாரை வணங்க முடியாதவர்கள் பிள்ளையார்பட்டி கணபதியை வணங்கி அதே அருளைப்பெறலாம் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள்.

thirunaaraiyur pillayar

தும்பிக்கையானின் படைவீடுகளில் ஆறாவதாக இருப்பது திருநாரையூர். இந்தத் தலத்தில் இருக்கும் புகழ்பெற்ற பொள்ளா பிள்ளையார் சந்நிதி. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூரில் ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது. திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் ஆலயத்தின் இடப்பக்கம் உள்ள சந்நிதியில் அருளும் பிள்ளையார், உளி கொண்டு செதுக்கப்படாதவர் என்பதால், பொள்ளா பிள்ளையார் என்று போற்றி வணங்கப் பெறுகிறார். நம்பியாண்டார்நம்பி மூலம் ராஜராஜ சோழனுக்கு தேவாரத் திருமுறைகள் கிடைக்கச் செய்தவர் இந்த பிள்ளையார்தான். இவரை வணங்கிட, கல்வியும் ஞானமும் மேம்படும் என்பது ஐதீகம்.

- Advertisement -