கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதை

0
889
- விளம்பரம் -

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள்,  நீயும் கடவுள் தான்” என்றார்.

bakthan

அதற்கு பக்தர், “அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை?” என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக, “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார், ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை”  என்று பதிலளித்தார்.

Advertisement

இப்படி பல வழிகளில் அந்த மகான் உண்மையை புரிய வைக்க முயன்றார். அனால் அந்த பக்தரோ அதை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். இறுதியாத அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக்  கொண்ட ஒரு மீன் இருக்கின்றது” என்றும் சொன்னார். மேலும், மனிதர்கள் போலவே பேசும் குரல் அதற்கு இருப்பதால் உன் கேள்விகளுக்குப்  பதில் கிடைக்கும் என்றும் சொன்னார்.

fish

உடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஹரித்வாருக்குப் புறப்பட்டார். அபூர்வமான மீனின் வருகைக்குக் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம்,  ’கடவுள் எங்கு இருக்கிறார், எப்படி அவரை உணர முடியும்?” என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மீன் அங்கு வந்து, ” எங்கிருந்து வந்திருக்காய்?” என்று கேட்டது.

fish

அதற்கு அந்த பக்தர், “மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார்” என்று கூறினார். அதற்கு அந்த மீன், எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும்?” என்று கேட்டது. அதற்கு பக்தர், “பைத்தியக்கார மீனே, வலது, இடது, மேலே, கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே” என்று பதிலளித்தார்.

உடனே மீன் கொஞ்சம் கடுமையாக, “நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார்” என்று மிக அழகாகக கூறலாயிற்று. அந்த பதிலைக் கேட்டுத்  திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார், “அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன்?”

fish

அதற்கு அந்த மீன், ” இதே கேள்வி தான் எனக்கும். தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பது தான்”.

மீனின் வடிவமைப்பு குறித்து அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மீன் எப்படி நீந்தால் அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவன் மீனிற்கு எடுத்துரைத்தான்.

உடனே மீன், “எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீங்கள் கூறியது போல , கடவுளை உணர நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கடவுளை உணரலாம். ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும்”.

பக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார்.

நீதி:

கடவுளை அடைய வேண்டும் என்றால் எண்ணங்களை அவர் மீது செலுத்த வேண்டும். எல்லாப் படைப்புகளிலும் அவரை உணர்ந்து வாழ வேண்டும்.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான சிறு கதைகள், குட்டி கதைகள் மற்றும் தத்துவ கதைகளை உடனுக்குடன் பெற எங்களுடைய மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement