எப்பொழுதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது கலவை சாதமாகத்தான் இருக்கும். தக்காளி சாதம், தயிர் சாதம், புதினா சாதம், சாம்பார் சாதம் இப்படி பல வகையான சாதங்கள் இருக்கின்றன. இவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் சாப்பிடும் குழம்பு சாதத்திற்கு பதிலாக இவ்வாறு சாப்பிடும் பொழுது மிகவும் அருமையாக இருக்கும். இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் பிரியாணியின் சுவையை நமக்கு நினைவுபடுத்தும். எனவே இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக உள்ளது. இவ்வாறு தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் இந்த உணவு காரம் குறைவாகவும், ருசியாகவும் இருக்கும். தேங்காய் பால் சாதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்கின்றனர். அதிலும் இந்த சாதம் உதிரி உதிரியாக இருந்தால் மட்டுமே சுவை அதிகமாக இருக்கும். குழைந்து விட்டால் இதன் சுவையே மாறிவிடும். வாருங்கள் தேங்காய்ப்பால் சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி – 200 கிராம், தேங்காய் – அரை மூடி, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, நட்சத்திர பூ – ஒன்று, கிராம்பு – 2, ஏலக்காய் – 3, மிளகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
முதலில் 200 கிராம் பிரியாணி அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். அதனுடன் தண்ணீர் சேர்த்து இரண்டு, மூன்று முறை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் தண்ணீர் சேர்த்து 30 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு அரை மூடித் தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் அதனை விழுதாக அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுக்க வேண்டும்.
இவ்வாறு இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு தக்காளியை க்யூப் வடிவில் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பிறகு பிரியாணி இலை, சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ மற்றும் மிளகு இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு அரிசியை சேர்த்து லேசாக வதக்கி விட்டு, உப்பு சேர்த்துக் கலந்து விட வேண்டும். பிறகு ஒரு கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் என அளந்து ஊற்ற வேண்டும். பின்னர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, அரிசியை வேக வைத்து எடுத்தால் சுவையான தேங்காய் பால் சாதம் தயாராகிவிடும்.