குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றால் மிகவும் பிடித்தமான ஒரு உணவுப் பொருளாகும் அதிலும் கடையில் வாங்கிக் கொடுப்பதை விட வீட்டில் செய்யும் இனிப்பு வகைகள் என்றால் தாராளமாக அனைவரும் சாப்பிடலாம் காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய இனிப்பு வகைகள் அதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கும் எனவே இது போன்ற இனிப்பு வகைகளை செய்து கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு காய்கறிகளையும் சாப்பிட கொடுக்க முடியும் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து விட்டால் சற்றும் யோசிக்காமல் கேரட்டை குக்கரில் சேர்த்து பத்தே நிமிடத்தில் அனைவரும் விரும்பும் இந்த கேரட் அல்வாவை உடனே செய்து முடித்து விடுங்கள் இவ்வாறு அனைவரும் விருப்பமாக சாப்பிடும் இந்த கேரட் அல்வாவை எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்:
கேரட் – முக்கால் கிலோ, பால் – ஒரு லிட்டர், நெய் – 2 ஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – முக்கால் ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 20.
செய்முறை:
முதலில் ஒரு லிட்டர் பாலில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் முக்கால் கிலோ கேரட்டை அதன் மேல் உள்ள தோலை மட்டும் தோல் சீவல் பயன்படுத்தி சுத்தமாக சீவி கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல்புறம் மற்றும் அடி புறத்தை மட்டும் வெட்டி தனியாக எடுத்து விட வேண்டும்.
பிறகு இந்த கேரக்ட்களை அப்படியே முழுவதுமாக குக்கரில் சேர்க்க வேண்டும். அவசர நேரத்திற்க்கு கேரட்டைத் துருவிக் கொண்டு இருக்காமல் இவ்வாறு கேரட்டைத் அப்படியே குக்கரில் சேர்த்து வேக வைத்து சுலபமாக இந்த கேரட் அல்வாவை செய்துவிட முடியும்.
அவ்வாறு குக்கரில் அனைத்தையும் சேர்த்து முடித்த பிறகு அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் ஒரு டம்ளர் பால் ஊற்றி, குக்கரை மூடி, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியை திறந்து இந்த கேரட்டை நன்றாக நசுக்கி விட வேண்டும். கரண்டி அல்லது மத்து வைத்து அப்படியே நசுக்கி விடலாம்.
இப்படி இல்லையென்றால் உருளைக்கிழங்கு மேஷர் பயன்படுத்தியும் நன்றாக மசித்துக் கொள்ளலாம். பின்னர் இதனை அடுப்பின் மீது வைத்து மீண்டும் கொதிக்க விட வேண்டும். பிறகு இதனுடன் முக்கால் லிட்டர் பால் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும். இந்த நேரத்தில் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் விட்டு விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் இதில் பால் சேர்த்து இருப்பதால் உடனே அடி பிடிக்க ஆரம்பிக்கும்.
பின்னர் பால் முழுவதும் சுண்டிய பிறகு இதனுடன் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, நெய் ஊற்றி அதனுடன் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இதனை அப்படியே கேரட் அல்வாவில் சேர்த்து கலந்து விடவேண்டும். சிறிது நேரத்தில் இந்த அல்வா கெட்டியானதும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.