மதுரை என்றாலே நம் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். இதற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்ற பெயரும் உண்டு. அந்தக் கோவிலுக்கு சென்றவர்களின் மனதில் அழியாமல் நிற்பது ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்களும், சிலைகளும் தத்ரூபமான வடிவில் நிற்பதுதான். வருடங்கள் பல கடந்தாலும் இன்றும் பொலிவுடன் நிற்கும் இந்த ஆயிரங்கால் மண்டபத்தை பற்றியும், அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் காண்போமா.
கோவிலின் வரலாறு
பாண்டிய மன்னன் குலசேகரனின் கனவில் சிவபெருமான் வந்ததாகவும், இதனால் பாண்டிய மன்னன் கடம்ப வனம் என்னும் காட்டினை அழித்து அந்த இடத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை கட்டியதாகவும் வரலாறு கூறுகின்றது. மீனாட்சி அம்மன் பிறந்த ஊர் மதுரை என்பதினால் மீனாட்சி அம்மனின் சன்னிதானம் முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் தான் மீனாட்சியை தரிசித்து விட்டு அதன்பின் சிவபெருமானை தரிசிக்கின்றோம்.
ஆயிரங்கால் மண்டபத்தின் தொழில்நுட்பம்
நம் முன்னோர்கள் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவில்கள் மண்டபங்கள், தூண்கள் இவைகளில் எல்லாம் ஏதோ ஒரு தொழில்நுட்பம் மறைந்து தான் இருக்கின்றது. ஆயிரங்கால் மண்டபத்தின் தொழில் நுட்பத்தை அறிய 1983 இல் மதுரையில் உள்ள மருத்துவ நிபுணர் காமேஸ்வரன் என்பவர் நவீன கருவிகளை வைத்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் அந்த தொழில்நுட்பத்தின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆயிரங்கால் மண்டபமானது ஒலியினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை வைத்து கட்டப்பட்டுள்ளதாக அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது. காரணம், கோவிலுக்கு வருபவர்கள் அமைதியான முறையில் தியானம் செய்து இறைவனை வழிபட வேண்டும் என்ற நோக்கம் தான்.
இதன் சிறப்புகள்
இந்த மண்டபத்தின் அற்புதத்தையும், சிற்பங்களின் அழகினையும், வடிவமைப்புகளையும் நம்மால் வரிசைப்படுத்தி கூறிவிட முடியாது. அத்தனை சிறப்புகள் கொண்டது. அவ்வளவு அற்புதங்களை மொத்தமாக கூற முடியாத பட்சத்தில் சில முக்கியமான சிறப்புகளைப் பற்றி மட்டும் காண்போம்.
ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயரினைப் பெற்றிருந்தாலும் இதில் 985 தூண்கள் மட்டுமே உள்ளது. இந்த மண்டபத்தில் நாம் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் தூண்கள் ஒரே வரிசையில் தான் தெரியும். ஒரு தூண் மற்றொரு துணை மறைக்காது. இந்த மண்டபத்தின் நடுவில் நிற்பவர்களை கூட நம்மால் காண முடியும். தூண்கள் அனைத்தும் 12 அடியைத் தொடும். இங்கு உள்ள வர்ணம் தீட்டப்படாத தூண்களும், வரிசையாக அமைந்துள்ள கட்டமைப்புகளும், மண்டபத்தை சுற்றி அமைக்கப்பட்ட காற்று துவாரங்கள் இவைகள் அனைத்தும் ஒளியை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள உபயோகப்படுத்தப்பட்ட யுத்திகளாக இருக்க முடியும்.
தென்இந்தியாவில் எங்கும் காணமுடியாத அளவிற்கு இங்கு தத்ரூபமான சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கற்களாலான தூண்களில் செதுக்கப்பட்டுள்ள ஆண், பெண் மற்றும் கடவுளின் சிலைகள் திராவிட கலையை உணர்த்துகின்றது. இந்தத் தூண்கள் கருப்பு மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டவை. முடிந்தவரை இதற்கு மெருகேற்றி உள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயக்க மன்னர்கள் பெரிய தூண்களை கொண்ட மண்டபத்தை கட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டினர். கற்களை உடைக்கவும் இடையூறு இல்லாமல் தூண்களை செதுக்கவும் தனித்தனியாக கூடங்கள் அமைக்கப்பட்டது.
ஆயிரங்கால் மண்டபத்தில் இசைத் தூண்களும் உள்ளன. இந்த தூண்கள் அனைத்தும் ஒரே கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்டு செதுக்கப்பட்டவை. இந்தத் தூண்களை நாம் தட்டும் பொழுது ஒவ்வொரு தூண்களும் ஒவ்வொரு ஒலியை எழுப்புகிறது. தற்பொழுது ஆயிரங்கால் மண்டபத்தில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1200 வருடங்கள் பழமை மிக்க சிலைகள், புகைப்படங்கள், ஓவியங்கள் போன்ற பழங்கால வேலைபாடுகளை கொண்ட பொருட்களை வைத்துள்ளனர்.
இவ்வாறாக ஆயிரங்கால் மண்டபத்தை பற்றி நாம் அறிந்தது கை அளவாக இருந்தாலும் அறியாதது உலகளவு. விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்பமும், இயந்திரங்களும், வாகன வசதிகளும் இப்படி எந்தவிதமான வளர்ச்சியையும் பெறாத காலகட்டத்தில் வியக்க வைக்கும் கோவில்களின் கோபுரங்களும், மண்டபங்களின் தூண்களும், நமக்குள் இன்னும் பல கேள்விகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
இதையும் படிக்கலாமே:
தினமும் காலையில் இதை எல்லாம் செய்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ?
English Overview:
Here we have 1000 pillar hall details in Tamil. It also called as Madurai 1000 kaal mandabam