2022 புத்தாண்டு பலன்கள் – சிம்மம்

2022-simmam
- Advertisement -

2022-ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் அற்புத ஆண்டாக அமைய இருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு தடைகளையும், கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டிருந்த உங்களுடைய வாழ்க்கையில் அவை படிப்படியாக குறைந்து ஏற்றமான ஒரு நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் சுபச்செலவாக அமையும் என்பதால் கவலை தேவையில்லை. மேலும் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க இருக்கிறது? என்பதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை நிம்மதி தரும் அமைப்பாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அமைகிறது. குழப்பங்கள், சண்டை, சச்சரவுகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். உற்றார், உறவினர்களின் ஆதரவுப் பெருகத் துவங்கும். தம்பதியர்கள் கருத்தொருமித்து வாழக்கூடிய அமைப்பாக இருப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். சுபகாரியத் தடைகள் விலகி நல்ல செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. மாணவர்கள் தங்கள் தனித் திறமையை வெளிப்படுத்தி ஏற்றம் காணக்கூடிய அற்புத ஆண்டாக இருக்கும்.

- Advertisement -

பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு இனிமையான பலன்களைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். செல்வ வளம் பெருக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. புதிய தொழில் மூலம் கிடைக்கக் கூடிய வருமானம் இரட்டிப்பு பலன் கொடுக்கும்.

தொழில்:
உத்யோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் அமைப்பாக இருக்கிறது. ஆண்டின் பிற்பாதியில் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபம் காணும் யோகம் உண்டு. விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் மூன்றாம் மனிதர்களாலே ஏமாற்றப்படலாம் எனவே புதிதாக எவரையும் எளிதில் நம்பி விட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் உண்டாகும். வேலை சார்ந்த புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம் காணப்படும். புதிய வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமைந்து செட்டில் ஆகி விடுவார்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் குருவருள் இருப்பதால் ஏற்றம் உண்டாகும்.

- Advertisement -

ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த தொடர் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும். ஆண்டின் தொடக்கத்தில் சில பிரச்சனைகள் தோன்றினாலும் ஆண்டின் பிற்பகுதியில் ஆரோக்கிய ரீதியான நல்ல ஒரு முன்னேற்றத்தை காண கூடிய யோகம் உண்டு. உணவு சார்ந்த விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்தினால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ரத்த காயங்கள், வெட்டு காயங்கள் போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது.

காதல்:
காதல் விஷயத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையேயான நல்ல ஒரு ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் பகைவர்களாக பாவித்து கொண்டிருந்த நீங்கள் சரிசமமாக கருத முயற்சி செய்வீர்கள். ஆண்டின் முதல் பகுதியில் நடந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு, அடுத்த பகுதியில் நிச்சயம் கிடைக்கும். கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்கிற கருத்தை மனதில் வைத்து இவ்வாண்டு செயல்படுவது நல்லது. திருமணம் ஆகாத காதல் ஜோடிகளுக்கு சில போராட்டங்களை கடந்து காதலில் வெற்றி பெரும் யோகம் உண்டு.

பரிகாரம்:
சிம்ம ராசியை பொறுத்தவரை ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் சோமவாரத்தில் ஈசனை வழிபடுவது உத்தமம். சனிக்கிழமைகளில் துளசியால் பெருமாளுக்கு அர்ச்சனையும், திங்கட்கிழமையில் வில்வத்தால் சிவனுக்கு அர்ச்சனையும் செய்து வந்தால் ஏற்றம் காணலாம். தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் பெற இயலாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்து வரலாம்.

- Advertisement -