2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் துல்லியமான கணிப்பு!

Newyear-Palangal-2023
- Advertisement -

பல சோதனைகள் நிறைந்த 2022 ஐ கடந்து 2023 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறோம். இந்த ஆண்டில் பல கனவுகளுடன் இருக்கக்கூடிய 12 ராசிக்காரர்களும் ஜோதிட அடிப்படையில் அதிர்ஷ்ட பலன்களை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். பொருளாதாரம், மேற்படிப்பு, வெளிநாடு செல்லும் யோகம், குடும்ப சூழல், திருமணம், ஆரோக்கியம், தொழில், வேலை வாய்ப்பு என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளுடன் பயணிக்க வேண்டிய இந்த 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

மேஷம்:-
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு பற்பல நற்பலன்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய நல்ல ஆண்டாக உங்களுக்கு அமைந்திருக்கிறது. உங்கள் ராசியில் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் திருமண யோகங்கள் கைகூடி வர இருக்கிறது. ஆண்டின் துவக்கத்திலேயே சரிந்திருந்த பொருளாதாரம் ஏற்றம் காண ஆரம்பிக்கும். சுய தொழிலில் சனி லாபம் தரக் கூடியதால் திடீர் லாபம், பெரிய மனிதர்களுடைய தொடர்பு எண்ணிப் பார்க்காத அளவிற்கு இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டின் மத்திம பகுதியில் இருந்து புதிய மாற்றங்கள் நிகழ்வதால் அனுகூல பலன்களை பெறுவீர்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற உங்களுடைய கனவை நிறைவேற்றிக் கொள்ளும் அதிர்ஷ்டம் உண்டாகும். கல்வி விஷயத்தில் தடைகள் வரலாம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. தம்பதியர் இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை மனதார பேசி தீர்த்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் எந்த மாற்றமும் இருக்காது, இருக்கக்கூடிய பிரச்சனைகளை அக்கறையுடன் சரி செய்ய பாருங்கள். பரிகாரமாக முருகனின் அறுபடை வீடுகளையும் தரிசிப்பது நல்லது.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு ராசி அதிபதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுப பேச்சு வார்த்தைகள் நிகழும். தம்பதியர் இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் மறையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயர தொடங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நிதானமும், விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைவலியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாடு செல்வதில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் இன்னும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பரிகாரமாக கோவில்களுக்கு விளக்கு ஏற்ற நெய் தானம் செய்து வாருங்கள்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு நீங்கள் நினைத்தபடி உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரக்கூடிய அற்புதமான பலன்களை கொடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கிறது. குடும்பத்தில் பிரிந்தவர்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் வந்து குவிய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டபடி ஆண்டின் இறுதிக்குள் பதவி உயர்வு அடைவீர்கள். பொருளாதாரம் உயர்ந்து கை நிறைய பணம் புழங்கும். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்பவர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் உண்டு. தள்ளிக் கொண்டே சென்ற திருமண யோகம் உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள் கவனமாக இருப்பது நல்லது. பரிகாரமாக சங்கடங்கள் தீர்க்கும் விக்னேஸ்வரரை விரதம் இருந்து வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு அஷ்டமத்து சனி உங்களை ஆட்டி படைக்க இருக்கிறது என்பதால் எதிலும் நிதானத்தை கை விடக்கூடாது. சந்திரனை ராசி அதிபதி ஆகக் கொண்டதால் மனக்குழப்பம் நீடிக்கும். பயணங்களின் பொழுது வேகம் தவிர்த்து விவேகத்தை கடைபிடிப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்கள் எத்தகைய தடைகளையும் தாண்டி வெற்றி நடை போடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை இல்லை என்றால் அவமானப்பட நேரலாம். அரசாங்க துறையில் பணி புரிய வேண்டும் என்று நினைப்பவர்கள், வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற கனவோடு இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பது பூர்த்தி அடையும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். கல்வி விஷயத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அவ்வப் பொழுது சிறு சிறு பிரச்சனைகள் வந்து மறையுமே ஒழிய பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது எனவே கவலை கொள்ள வேண்டாம். பரிகாரமாக சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு சரிவில் இருந்த நீங்கள் கோபுரத்தின் உச்சிக்கே செல்லக்கூடிய அற்புதமான பலன்கள் நிறைந்த நல்ல ஆண்டாக அமையப் போகிறது. இதுவரை உங்களை ஆட்டி படைத்து கொண்டிருந்த துன்ப நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உயரும் என்பதால் புதிய புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடமாற்றம், சம்பள உயர்வு போன்றவற்றில் திருப்தியான மனநிலை இருக்கும். கல்வி விஷயத்தில் தைரியமாக முடிவெடுங்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்பவர்கள் மே மாதத்திற்கு முன்னரே அதற்கான முக்கிய விஷயங்களை தயார் செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் சில சமயங்களில் சங்கடங்கள் வந்து செல்லும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பரிகாரமாக பைரவருக்கு செவ்வரளி மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள் தடைகள் விலகும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு மங்கள காரியங்கள் குறைவில்லாமல் நடக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. திருமணம் தடைகள் விலகி கெட்டிமேளம் கைகூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தமான நிலை மாறும் மேலும் உங்களுடைய அயராத உழைப்பிற்கு ஏற்ற எதிர்பாராத பலன்களையும் அனுபவிக்க கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீராத கடன் தொல்லைகள் தீர்வுக்கு வரும். பொருளாதாரம் உயர துவங்கும். மேற்படிப்பு விஷயங்களில் சிந்தித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. வெளிநாடு செல்லும் விஷயத்தில் சாதகமான பலன்கள் உண்டு என்றாலும் கவனமுடன் எதையும் கையாளுவது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண கூடுதல் அக்கறையுடன் இருப்பது உத்தமம். பரிகாரமாக சனிக்கிழமைகளில் விரதம் இருந்து விஷ்ணு ஆஞ்சநேயர் நரசிம்மர் போன்ற கடவுளை வணங்கி பலன் பெறலாம்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு இதுவரை உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அர்த்தஷ்டம சனி முடிவுக்கு வரும் என்பதால் சுபயோக பலன்கள் கை கூடி வரக்கூடிய இனிமையான ஆண்டாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் கெட்டி மேளம் கொட்டும் சத்தம் கேட்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார நிலை திடீரென ஏறிக்கொண்டே செல்லும் இதனால் லாபத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகள் பல வந்தாலும் அதனை தகர்த்து எறிந்து உங்களுடைய திறமைக்கு உரிய பலன்களை அனுபவிக்க இருக்கிறீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கை கூடி வரும். குடும்பத்தில் இருந்து வந்த குறைகள் அகன்று குதூகலம் பிறக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். பரிகாரமாக செவ்வாய் வெள்ளியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள் நன்மைகள் பிறக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இவ்வாண்டு மகிழ்ச்சி நிறைந்த நல்ல ஆண்டாக இருக்க போவதால் வரவேற்க காத்திருங்கள். இதுவரை பட்ட துன்பத்திற்கெல்லாம் நற்பலன் காணக்கூடிய யோகம் வரப் போகிறது. மனதில் ஒரு விதமான நிம்மதி குடிகொள்ளும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த வெறுப்புகள் மறைந்து அன்னோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் மனம் போன போக்கில் செல்லாமல் புத்தியுடன் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்தாலும் சுபச் செலவாக அமையும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காண்பிப்பது நல்லது. பரிகாரமாக சிவ வழிபாடு செய்து வாருங்கள், பிரதோஷத்தில் கலந்து கொள்ளுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு தரித்திரங்கள் ஒழிந்து பல சரித்திரங்களை படைக்க கூடிய அற்புதமான ஆண்டாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் மறைந்து சிரிப்பு சத்தம் அதிகம் கேட்கக் கூடிய நல்ல அமைப்பாக அமைந்திருக்கிறது. தம்பதியர் இடையே ஒற்றுமை வலுப்பெறும். குரு பலன் அமைந்திருப்பதால் சுப காரியங்களும் களைகட்ட போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏழரை சனி முடியப் போவதால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை குறைவில்லாமல் லாபமாக அனுபவிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் உங்களுடைய முன்னேற்றத்தில் ஏற்றம் இருக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் சிறந்த ஒன்றை தேர்வு செய்யுங்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அவ்வப்பொழுது சோர்வு தட்டும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பரிகாரமாக தட்சிணாமூர்த்தி, குரு பகவான் வழிபாடு மேற்கொண்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு உங்களுக்கு சாதகமான பலன்கள் நிறைந்த நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது. இழுப்பறியில் இருந்து வந்த சுபகாரியம் முயற்சிகளில் வெற்றிகள் பல குவிய போகிறது. மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். குடும்ப வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியான ஏற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஒரே அடியாக அகல கால் வைத்து மேலே செல்ல முயற்சிக்காதீர்கள் படிப்படியாக கால் வைத்து மெல்லமாக ஏறுங்கள். கல்வியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் சற்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் பாத சனியால் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம் கவனமுடன் இருப்பது நல்லது. பரிகாரமாக சனிக்கிழமைகளில் சனி பகவானை தொழுது வாருங்கள்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு ஜென்ம சனியில் இருந்து மீள முடியாவிட்டாலும் உங்களுடைய அயராத உழைப்பால் விண்ணை எட்டும் வெற்றியை காண இருக்கிறீர்கள். எதிலும் அலட்சியம் காட்டாமல் தொடர்ந்து உங்களுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்து வாருங்கள் நன்மைகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே வீண் சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது இல்லை என்றால் விரிசல் விழும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களுக்கு ஈடு கட்டும் விதமாக லாபம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது என்றே நினைத்துக் கொள்ளுங்கள். மேற்படிப்பு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் பயப்பட வேண்டாம். பரிகாரமாக அனுமனுக்கு வெற்றிலை மாலை போட்டு, வெண்ணை சாட்சி வழிபட்டு வாருங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு நற்பலன்கள் அதிகரிக்கக் கூடிய நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. இதுவரை இருந்து வந்த மன கவலைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்க துவங்கும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் அடங்கும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் உதிக்கத் துவங்கும். ஆச்சரிய படத்தக்க விஷயங்கள் எல்லாம் நடக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய அனுபவங்கள் பல பாடங்களை கற்பிக்கும், ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருங்கள். வெளிநாடு செல்லக்கூடிய உங்களுடைய கனவு நிறைவேறும். உயர்கல்வி பயில நினைப்பவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் திட்டமிட்டபடி நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள் இல்லை என்றால் பல பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பரிகாரமாக நவகிரக வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -