2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. புதிதாக 2025 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த வருடத்தில் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வரும் வருடத்தில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் நினைப்போம். அப்படி நினைக்கும் பட்சத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி எந்த முறையில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நமக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பான மாதமாக அமையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
2025 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய வழிபாடு
தமிழர்கள் பண்பாட்டில் சித்திரை 1 என்பதுதான் வருட பிறப்பாக கணக்கிடப்படுகிறது. இருப்பினும் ஜனவரி ஒன்றாம் தேதியும் அனைவரும் வழிபாடுகளை மேற்கொள்வார்கள். அனைத்து ஆலயங்களிலும் சிறப்பான வழிபாடுகள் என்பது நடைபெறும். அப்படி செய்வதன் மூலம் அந்த வருடமே நமக்கு சிறப்பான வருடமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. அப்படி சிறப்பான வருடமாக அமைவதற்கு நாம் நம்முடைய குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானையும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த வருடம் சிறப்பான வருடமாக அமையும்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு அபிஷேகம் செய்வதற்கு என்று ஒரு பொருள் வேண்டும். அதுதான் சந்தன கட்டை. நம்முடைய கையால் சந்தன கட்டையை பன்னீர் ஊற்றி நன்றாக அரைத்து அதனுடன் ஜவ்வாது, மரிக்கொழுந்து, குங்குமப்பூ போன்றவற்றையும் சேர்த்து வைத்து அரைக்க வேண்டும். இப்படி அரைத்த இந்த சந்தனத்தை ஒரு உருண்டையாக உருட்டிக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடி விநாயகரிடம் சென்று அவருக்கு இந்த சந்தனத்தை பயன்படுத்தி தங்களுடைய கைகளாலேயே அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்வில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று தங்களால் இயன்ற அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தங்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய இருள் அனைத்தையும் நீக்கி ஒளிமயமான எதிர்காலத்தை சிவபெருமான் அருள்வார் என்றும் கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் முடிந்த அளவிற்கு அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அதே போல் மஞ்சள், சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கொண்டு இந்த வழிபாட்டை செய்தோம் என்றால் அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று எண் கணித ரீதியாக கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:பண வசியம் ஏற்பட மார்கழி செவ்வாய் பரிகாரம்
இந்த எளிமையான வழிபாட்டு முறையை ஜனவரி ஒன்றாம் தேதி முழுமனதோடு செய்து 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக மாற்றிக் கொள்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.