1 கொத்து வேப்பிலை தரும் 3 எளிய ஆன்மீக பரிகாரங்கள்! தோஷங்கள் நீங்க அமாவாசையில் வேப்பிலையை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

amavasai-vepilai-amman
- Advertisement -

வேப்பிலை என்பது அம்பாளுக்கு உரிய ஒரு மரமாக கருதப்படுகிறது. வேப்பிலையின் கசப்பு நம் உடலில் இருக்கும் நோய்களை மட்டுமல்லாமல், துஷ்ட சக்திகளையும் அழிக்கும் ஆற்றல் படைத்துள்ளது. மேலும் இந்த வேப்பிலையில் இருக்கும் அபூர்வ சக்திகள் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை விரட்டி அடிக்கின்றன. இந்த வகையில் வேப்பிலையை வைத்து எளிதாக செய்யக்கூடிய 3 ஆன்மீக பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலாவதாக வேப்பிலையில் இருக்கும் கசப்புத் தன்மை துஷ்ட சக்திகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதால் இதனை நன்கு வெயிலில் உலர்த்தி காய வைத்து தூளாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய தினங்களில் தூபம் போடும் பொழுது இந்த வேப்பிலை பவுடரையும் கொஞ்சம் தூவி தூபம் போட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விரட்டியடிக்கப்பட்டு விடும்.

- Advertisement -

மனதில் நினைத்த வேண்டுதல்கள் எல்லோருக்கும் எளிதாக நிறைவேறுவது இல்லை. இப்படி நிறைவேறாத வேண்டுதல்களை கூட இந்த சக்தி வாய்ந்த வேப்பிலை நமக்கு நிறைவேற்றி தரும். ஒரு கொத்து வேப்பிலையை மரத்திலிருந்து [பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான காட்டன் துணியை கட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மஞ்சளில் கொஞ்சம் தண்ணீர் விட்டு குழைத்து தோய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை உலர விட்டு பின்னர் அதில் இந்த வேப்பிலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஒரு சிட்டிகை குங்குமத்தை தூவி கொள்ளுங்கள். பின்னர் ஒரு காணிக்கையாக முடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே கொண்டு போய் உங்கள் வீட்டில் பூஜை அறையில் அம்மன் படத்திற்கு கீழே வைத்து விடுங்கள். இப்படி வேப்பிலையுடன் நாணயத்தை முடிந்து வைத்து, வேண்டும் பொழுது உங்களுடைய தீராத வேண்டுதல்கள் கூட எளிதாக தீரும் என்கிற ஐதீகம் உண்டு. உங்கள் வேண்டுதல் நிறைவடைந்த பின்பு இந்த முடிச்சை கொண்டு போய் அப்படியே கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். மேலும் கோவிலில் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து, குடும்பத்தோடு வழிபட்டு வந்தால் சகல, சவுபாக்கியங்களும் உண்டாகும்.

- Advertisement -

எலுமிச்சை கனி நல்ல சக்திகளையும் உள்வாங்கும், அதே சமயத்தில் கெட்ட சக்திகளை உள்வாங்கும் திறன் கொண்டது. ஆன்மீக பரிகாரங்களுக்கும் எலுமிச்சை கனி பயன்படுத்தப்படுகிறது. தாந்த்ரீக பரிகாரங்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றுக்கும் எலுமிச்சை கனி பயன்படுத்தப்படுகிறது. அது போல மனித உடலும் நல்ல சக்திகளையும், கெட்ட சக்திகளை கிரகிக்கும் ஆற்றல் படைத்தது. இந்த கெட்ட சக்திகள் மனித உடல் கிரகித்துக் கொண்டால் எதிர்மறை ஆற்றல் ஆதிக்கம் செலுத்த துவங்குகின்றன. இதனால் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களை அறியாமல் தீயது செய்ய அவை தூண்டிவிடுகின்றன.

சுயநலம், ஆணவம், கோபம், குரோதம், பகை போன்றவற்றை ஏற்படுத்தும் இந்த எதிர்மறை சக்தியை நம் உடலில் இருந்து நீக்குவதற்கு அமாவாசையில் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு கொத்து வேப்பிலை, கொஞ்சம் சுத்தமான இழைக்கப்பட்ட மஞ்சள், ஒரு ஸ்பூன் கல்உப்பு ஆகியவற்றை சேர்த்து குளித்து வந்தால் போதும். எத்தகைய கெட்ட சக்திகளும் உங்கள் உடலை விட்டு எளிதாக நீங்கிவிடும் அதன் பிறகு நீங்கள் எந்த விதமான தோஷங்களுக்கும் ஆட்படாமல், நேர்மறையாக சிந்திக்க முடியும். இந்த மூன்று அதி சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்களை வேப்பிலையைக் கொண்டு செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -