இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள விதவிதமான சட்டிகளை செய்வோம். அந்த வரிசையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பருப்பு வகைகளை சேர்த்து, குறைந்த அளவில் எண்ணெய் ஊற்றி ஆரோக்கியமான ஒரு சட்னி ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். காரசாரமா இப்படி சட்னி அரைச்சு இதை இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். துவையல் போல அரைத்து ரசம் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். சுடச்சுட சாதத்தில் இந்த துவையலை போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம் தான். இந்த சூப்பரான சட்னி ரெசிபியை நேரத்தைக் கடத்தாமல் தெரிந்துகொள்வோமா.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறமாக பக்குவமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து அதே கடாயில் 1 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை, சேர்த்து பொன்னிறமாக வறுத்து இதையும் துவரம்பருப்பு கடலைப்பருப்புடன் சேர்த்து விடுங்கள்.
அடுத்தபடியாக 4 வர மிளகாயை அந்த கடாயில் போட்டு 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, வறுபட்ட பருப்புகளோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எல்லாப் பொருட்களும் அதாவது வறுத்த துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வரமிளகாய், இந்த நான்கு பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் முதலில் கொரகொரப்பாக அரைத்து விட வேண்டும்.

அதன் பின்பு கொரகொரப்பாக அரைத்த இந்த பொடியோடு 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, தோல் உரித்த பூண்டு பல் 2, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை போட்டு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.
இந்த சட்னிக்கு ஒரு தாளிப்பு கொடுக்கலாம். 2 ஸ்பூன் நல்லெண்ணையில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து சட்னியில் கொட்டி கலந்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கரைத்து இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள வைத்தால் சூப்பரான சுவையில் அருமையா சட்னி தயார். தேவைப்பட்டால் கெட்டியாகவும் இதைத் துவையலாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு: இந்த சட்னிக்கு பருப்பு வகைகளை சரியான அளவில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பருப்பு வகைகள் நன்றாக வறுபடவில்லை என்றால் சட்னி கொழகொழவென வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை கூட்டியோ குறைத்தோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு காரம் கொஞ்சம் அதிகமாக இருந்தால் சுவை அதிகரிக்கும்.