எல்லாம் வல்ல அந்த ஈசனின் ஆசிர்வாதம், அந்த ஈசனின் தரிசனம் நேரடியாக நமக்கு கிடைக்கப்பெற்றால், நாம் தான் அதிர்ஷ்டசாலி. அந்த வகையில் மாதம் தோறும் ஒரு நாள், அந்த ஈசனை தரிசிக்க வாய்ப்பை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கிறது. அந்த நாள் தான் மூன்றாம் பிறை தரிசனம்.
மார்ச் 28ஆம் தேதி, மாலை நேரத்திலேயே அமாவாசை திதி பிறந்து விட்டதால், மார்ச் 30ஆம் தேதியான இன்று, ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும். இன்றைய தினம் மூன்றாம் பிறை தரிசனத்தின் போது, பிறை சூடிக்கொண்டிருக்கும் எம்பெருமானின் தரிசனத்தை பெற்று, செய்த பாவங்களுக்கான தண்டனையிலிருந்து விலக, வழிபாட்டை எப்படி மேற்கொள்வது ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இன்று மூன்றாம் பிறை தரிசனம்
இன்று மாலை 6:30 மணிக்கு மேற்கு திசையில் மூன்றாம் பிறை உதயமாகும். 6:30 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த தரிசனத்தை பெற, காத்திருக்க வேண்டும் அந்த ஈசனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருந்தால், நிச்சயம் மூன்றாம் பிறையை நீங்கள் தரிசனம் செய்வீர்கள். பிறை சூடிக் கொண்டிருக்கும் அந்தப் பித்தனை தரிசனம் செய்யுங்கள்.
ஒருவேளை மேகமூட்டம் காரணமாகவோ, அல்லது ஒரு சில இயற்கை மாறுதல்கள் காரணமாகவோ, உங்களுக்கு பிறை தரிசனம் கிடைக்கவில்லை என்றாலும், மனம் தளர விடக்கூடாது. அடுத்த மாதம் மூன்றாம் பிறை வரும்போது, இந்த பிறை நிலவை பார்க்க முயற்சி செய்ய வேண்டும். சரி இன்று பிறை தரிசனம் உங்களுக்கு கிடைத்துவிட்டது.
ஈசனை மனதார நினைத்து பெரிய பிறை நிலவைப் பார்த்து “ஹர ஹர மஹாதேவா” என்ற வார்த்தையை சொல்லி செய்த பாவத்திற்கு மனதார மன்னிப்பு கேட்டு, ஈசனை வேண்டிக் கொண்டால் செய்த பாவங்களுக்கு உண்டான மன்னிப்பும் கிடைக்கும். ஈசனின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.
வாழ்க்கையில் துன்பம் ஏதாவது இருந்தால் அந்த பிறை நிலவு தெரியும் போது அந்த துன்பத்தை ஈசனிடம் மனதார சொல்லுங்கள். இந்த துன்பத்தை சீக்கிரம் விலக்கி வையப்பா சிவபெருமானே என்று வேண்டிக் கொண்டால் அந்த ஐயன் எம்பெருமான் உங்களுடைய கஷ்டங்களை உடனடியாக தீர்த்து வைப்பார்.
சிவன் பாடல்
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கிறேன்
மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணைநல்லூர் அருள்துறையுள்
அத்தா… உனக்கு ஆளாய்
இனி அல்லென் எனலானேன்
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே !
இதையும் படிக்கலாமே: வசந்த நவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரம்
வாய்ப்பு உள்ளவர்கள் இன்று பிறை தரிசனம் பார்க்கும்போது இந்த பாடலை படித்தால் சிவபெருமான் மனம் குளிர்ந்து உங்களுக்கான வரத்தை வாரி வாரி கொடுப்பான். சிவபெருமான் வரம் கொடுப்பதில் வள்ளல். ஒரு அசுரன், உண்மையான பக்தியோடு வரத்தை கேட்டால் கூட கொடுக்கக் கூடிய வல்லமை கொண்டவர் சிவபெருமான். நமக்குள் இருக்கும் அசுரனை அழித்து, அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காமல், நல்லதொரு வரத்தை கேட்டு இந்த மூன்றாம் பிறை தரிசனத்தில் ஈசனின் வரத்தை பெறுவோம். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.