ரோஜா செடியில் 7 இலைகளை வெட்டலாமா? கூடாதா? அதிக பூக்கள் பூக்க என்ன செய்வது?

- Advertisement -

ரோஜா செடி பற்றிய சந்தேகங்கள் பலருக்கும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு செடியை வாங்கி வைத்து விட்டால் மட்டும் போதாது. அதற்குரிய பராமரிப்பு மிகவும் அவசியம். ரோஜா செடியை பொறுத்தவரை மிக எளிய முறையிலேயே அதை பராமரித்து வரலாம். பெரிய கம்பு சுத்துற வேலை எல்லாம் இல்லைங்க. அடிக்கடி முறையாக வெட்டி விட்டால் போதும்! பெருசு பெருசா நிறைய ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்கும். அதை எப்படி முறையாக செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

roja-chedi3

ரோஜா செடியை பொறுத்த மட்டும் மிக முக்கியமாக தேவைப்படுவது உரம். நீங்கள் வாங்கும் பொழுதே ரோஜா செடியை கவனித்து பார்த்து வாங்க வேண்டும். பொதுவாக ரோஜா செடியில் அனைவருக்கும் வரும் பிரச்சனை, ஏழு இலைகளை கொண்ட கிளையை வெட்டி விட வேண்டுமா? அல்லது வெட்டவே கூடாதா? என்கிற சந்தேகங்கள் எழும். நீங்கள் வாங்கும் ரோஜா செடியில் ஏழு இலைகள் கொண்ட கிளையில் மொட்டுக்கள் இருந்தால் தாராளமாக அதை வாங்கலாம். அந்தச் செடியே அப்படி ஒரு வகையை சேர்ந்ததாக இருக்கும். அதில் சின்ன சின்ன ரோஜா பூக்கள் பூப்பவையாக இருக்கும்.

- Advertisement -

நிறைய ரோஜா பூக்கள் பூக்க ஐந்து இலைகளை கொண்ட கிளைகள் இருக்கும் ரோஜா செடியாக பார்த்து வாங்குவது நல்லது. அதே போல் மண்புழு உரம் ரோஜா செடியை பொருத்தவரை மிகச்சிறந்த உரமாக இருக்கும். மண்புழு இயற்கையாகவே மண்ணின் ஆரோக்கியத்தை காக்க வல்லது. மண் புழுக்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்லும் பொழுது மண்ணுக்கு இயற்கையாகவே காற்றோட்டம் கிடைக்கிறது. இதனால் அதில் வளரும் செடிகள் செழிப்பாக வளர்கின்றன.

multi-color-roses

அதன் பிறகு உங்கள் செடிகளில் வளரும் கிளைகளை கவனித்து வாருங்கள். ஒரு கிளையில் ஏழு இலைகள் இருந்தால் அவை மொட்டுக்கள் விடாது. அதை ஆண் கிளை என்று கூறுவார்கள். அதனால் ஏழு இலைகள் இருக்கும் கிளை மொட்டுகள் விடுவதில்லை. அந்த கிளைகள் பச்சை பசேலென பசுமையாக வளர்ந்தாலும் அதை வெட்டி விடுவது தான் நல்லது. அதை நீங்கள் வெட்டி விட்டால் அதிலிருந்து பக்கக் கிளை முளைத்து மீண்டும் துளிர்விடும்.

- Advertisement -

புதிதாக வரும் கிளையில் ஐந்து இலைகள் கொண்டு முளைக்கும் பொழுது அதில் மொட்டுக்கள் அதிக அளவில் பூக்கும் திறன் உண்டாகும். இலைகள் காய்ந்து போனால் நீங்கள் அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். காய்ந்த இலைகளை காம்புடன் வெட்டி விடுங்கள். ரோஜா செடியை கொடி போல பெரிதாக வளர்க்க கூடாது. சிறியதாக இருந்தாலும் அதில் நிறைய ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக பார்ப்பதற்கே கண்கவரும் வண்ணம் பூக்கள் பூக்க விட வேண்டும்.

7-leaves-rose-plant

நீங்கள் கிளையை வெட்டும் பொழுது ஒட்ட வெட்டாமல் சிறிதளவு காம்பை விட்டு விட்டு வெட்டுங்கள். அதிலிருந்து வரும் பக்க கிளைகள் நன்கு துளிர்க்கும். பூக்கள் காய்ந்து இருந்தாலும், இலைகள் காய்ந்து இருந்தாலும் உடனே வெட்டி விடுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு சரியாக வெட்டி வளர்க்கிறீர்களோ, அந்த அளவிற்கு மற்ற கிளைகளில் வேகமாக இலைகள் துளிர்த்து, மொட்டுக்கள் அதிகமாக விட்டு, பூக்களும் அதிகமாக மலரும் என்பதை நினைவில் வையுங்கள். இப்போது தெரிந்திருக்கும் ஏழு இலைகள் கொண்ட கிளையை வெட்ட வேண்டும் என்பது தான் ரோஜா செடிக்கு நல்லது என்று. இதே போல செய்து உங்கள் ரோஜா செடியை ஆரோக்கியமாக வளர்த்து பயன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் தோட்டத்திற்கு காய்கறி மற்றும் பழக்கழிவை போடுகிறீர்களா? அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கிட்டு அப்பறமா போடுங்க.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -