இட்லி தோசைக்கு சாம்பார், சட்னி போன்றவை எப்படி நல்ல ஒரு சுவையை கொடுக்குமோ, அதே போல் தான் இட்லி பொடியும். இன்றும் பெரும்பாலான கடைகளில் சாம்பார் சட்னியுடன் கண்டிப்பாக ஏதாவது ஒரு பொடியை இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக கொடுப்பார்கள். இட்லி பொடி பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து வறுத்து அரைத்து செய்வார்கள். உண்மையிலே இதன் சுவை அபராமாக இருக்கும். இப்போது நாம் இந்த பதிவில் பார்க்கப் போவது எள்ளு பொடி. இந்த எள்ளு பொடியும் இட்லி தோசை போன்றவற்றுக்கு நன்றாக இருக்கும், அதை விட சுடச்சுட சாதம் வடித்து அதில் இந்த கொடியை சேர்த்து கொஞ்சம் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடும் போது இதன் சுவை அத்தனை நன்றாக இருக்கும் அதை விட உடலுக்கும் அதிக சத்துக்கள் கிடைக்கும்.
இந்த எள்ளு பொடியை அவசியம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய நல்ல ஆரோக்கியமான உணவு. இதில் சேர்க்கும் பொருட்கள் அப்படி, இதில் நாம் கருப்பு உளுந்தையும் கருப்புஎள்ளையும் சேர்க்கப் போகிறோம். கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், நார்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து இருக்கிறது. எலும்புகளுக்கு வலிமை தந்து எலும்பு தேய்மானம் போன்றவைகள் வராமல் தடுக்கவும், வந்த பின்பு அதை சரி செய்யவும் கருப்பு உளுந்து போல ஒரு அருமருந்து கிடையாது. ஆகையால் தான் பெண் குழந்தைகள் பூப்பெய்தியுடன் அவர்களின் இடுப்பு எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்தையும் நல்லெண்ணெயும் சேர்த்து களி செய்து கொடுப்பார்கள். இப்போது அதே பொருட்களை வைத்து தான் இந்த பொடியையும் செய்ய போகிறோம்.
இதில் சேர்க்கும் இன்னொரு முக்கியமான பொருள் கருப்பு எள்ளு, அதிலும் ஊட்டச்சத்துக்களும், தாது சத்துக்களும் உள்ளது. இதில் இரும்புச் சத்து, விட்டமின் ஏ,பி போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இது ஞாபகம் சக்தியை அதிகரிக்கும்,உடல் சோர்வை நீக்கும், உடலில் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும். இது போன்ற அனைத்து நன்மைகள் இந்த கருப்பு எள்ளில் உள்ளது. இதைப் போல உடலுக்கு ஆரோக்கியமான அத்தனை பொருட்களையும் சேர்த்து அரைக்கும் இந்த எள்ளு பொடியை கட்டாயம் அனைவரும் உணவில் சேர்த்துக் கொள்ள நல்லது.
இப்போது இந்த எள்ளு பொடி எப்படி அரைப்பது என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஒரு கப் கருப்பு உளுந்தை நல்ல வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்து ஒரு தட்டில் சேர்த்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக சூடானவுடன் ஒரு கப் எள்ளை அதில் சேர்த்து வறுக்க வேண்டும். எள் பொரிய ஆரம்பித்த உடனே எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். எள்ளை வறுக்கும் போது கவனமாக வறுக்க வேண்டும் அதிகமாக வறுத்து விட்டால் கசந்து விடும்.
அதன் பிறகு இதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, பதினைந்து காய்ந்த மிளகாய் சேர்த்து கருகி விடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அனைத்தும் நன்றாக ஆற வைத்து முதலில் கருப்பு உளுந்து காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக இருக்கும்படி பவுடர் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு எள்ளையும், கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்து இரண்டு சுற்று மட்டும் விட்டால் போதும் அதற்கு மேல் அரைக்க கூடாது அரைத்தால் அதிலிருந்து எண்ணெய் வெளியேறி விடும் கசப்பு தன்மை வந்து விடும்.
இதையும் படிக்கலாமே: அரிசி மாவு இருந்தால் போதும். 5 நிமிடத்தில் கார்த்திகை தீபத்திற்கு இந்த அப்பம் தயார். ருசியாகவும் இருக்கும். அதே சமயம் சாஃப்ட் ஆகவும் இருக்கும்.
இப்போது அரைத்த எள்ளு பொடியை ஏற்கனவே அரைத்து வைத்த கருப்பு உளுந்து பொடியுடன் சேர்த்து கலந்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள் இந்த பொடி ஒரு வாரம் வரை இதன் ருசியும் மணமும் மாறாமல் அப்படியே இருக்கும். உடலை நல்ல முறையில் ஆரோக்கியமாக காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், நிச்சயம் வாரம் ஒரு முறை இந்த பொடியை அரைத்து வைத்து கொண்டு உங்கள் உணவில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.