கஜடா செய்வது எப்படி | Sweet kajada recipe in Tamil
ஒரு கப் மைதா மாவு இருந்தால் ஸ்வீட் கடைக்கு போய் இந்த கஜடா வாங்க வேண்டிய அவசியமே இல்லை! நாமே வீட்டிலேயே பத்து நிமிடத்தில் சுலபமாக தயாரித்து விடலாம். இதை டீக்கடை அல்லது ஸ்வீட் கடை கஜடா என்றும், கலகலா பிஸ்கட் என்றும், சிலர் மைதா பிஸ்கட் என்றும் குறிப்பிடுவர். எல்லோருமே விரும்பி சாப்பிடும் இந்த எளிமையான மைதா பிஸ்கட் ரெசிபி எப்படி நாமும் தயாரிக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 400 கிராம், சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய் – 4, நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், காய்ச்சிய பால் – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
செய்முறை
கஜடா செய்வதற்கு முதலில் 400 கிராம் அளவிற்கு மைதா மாவு எடுத்துக் கொள்ளுங்கள். 400 கிராம் மைதா மாவிற்கு 100 கிராம் அளவிற்கு சர்க்கரை சரியாக இருக்கும். சர்க்கரையை எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் நாலு ஏலக்காய் துண்டுகளை சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மைதா மாவுடன் அரைத்து எடுத்த இந்த சர்க்கரை மாவையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் அல்லது டால்டா சேர்த்து கலக்க வேண்டும். மாவை எடுத்து கையில் கெட்டியாக பிடித்தால் பிடிபட வேண்டும், அப்பொழுது தான் மாவு சரியான பதத்தில் இருப்பதாக அர்த்தம். இந்த சமயத்தில் நன்கு காய்ச்சி ஆற வைத்த பால் தேவையான அளவிற்கு சேர்த்து கெட்டியாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைய வேண்டும். அதிகம் தளர்வாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள் பின்பு இதை 30 நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.
அதன் பிறகு மாவை பிரித்து பெரிய பெரிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மாவை சதுரமாக சற்று கனமாக தட்டிக் கொள்ளுங்கள். பிறகு சதுர சதுரமாக கத்தியால் மாவை உங்கள் விருப்பம் போல வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வானலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் கொதித்து வந்ததும் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள மாவை சேர்த்து பொன்னிறமாக பொரிய விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
இல்லத்தரசிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 சமையல் குறிப்புகள் இதோ உங்களுக்காக!
உள்ளுக்கும், வெளியிலும் நன்கு வேக வேண்டும் என்பதால் அவ்வப்பொழுது பிரட்டி விட்டுக் கொண்டே இருங்கள். அப்போதுதான் பிஸ்கட்டுகள் சமமாக ஒரே நிறத்தில் நன்கு வேகும். அவ்வளவுதாங்க, இதை ஒரு காற்று புகாத டப்பாவில் கீழே டிஸ்யூ பேப்பரை விரித்து ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகவே போகாது. தேவைப்படும் பொழுதெல்லாம் எடுத்து சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பும் இந்த எளிய கஜடா பிஸ்கட் ரெசிபி நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி கொடுத்து அசத்துங்க!