பூக்களை பொறுத்த வரை விலை மலிவாக கிடைக்கும் போது அதிகமாக வாங்கி கட்டி வைத்து விட்டால், தினமும் தலைக்கு வைத்துக் கொள்ளவும், பூஜைக்கு பயன்படுத்தவும் நன்றாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்றைய சூழ்நிலையில் பெண்களும் வேலைக்கு செல்வதால் நேரம் கிடைக்கும் போது கட்டி வைத்து விட்டால் பயன்படுத்த சுலபமாகவும் இருக்கும். அப்படி நினைத்து வாங்கி கட்டி வைத்தால் அடுத்த நாலே பூ வாடி வதங்கி வீணாகி விடும். இனி அப்படி ஆகாமல் இருக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். வாங்க அது என்னவென்று இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிஞ்சுக்கலாம்.
இந்த குறிப்புகளை அனைத்தையும் பயன்படுத்தும் முன்பு நீங்கள் வாங்கும் பூக்கள் நல்ல மொட்டுக்களாக மலராத பூக்களாக வாங்கி வைக்க வேண்டும். ஏற்கனவே மலர்ந்த பூக்களை வாங்கி வைத்தால் அதிக நாள் தாங்காது.அதே போல கட்டிய பூக்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்காமல் சில்வர் பாத்திரத்தில் வைக்க வேண்டும். அப்போது தான் பாத்திரத்தில் இருக்கும் குளுமையே பூக்களை வாடாமல் பாதுகாக்கும்.
அப்படி சில்வர் பாத்திரத்தில் வைக்கும் பொழுது பாத்திரத்தின் அடியில் முதலில் வாழை இலையை போட்டு விடுங்கள். அதன் மேல் கட்டிய பூக்களை வைத்து வாழை இலையின் ஓரத்தில் இருக்கும் தண்டு பகுதியை சின்ன சின்னதாக நறுக்கி அதை பூக்களின் இடையே போட்டு விடுங்கள். அதன் பிறகு மேலே இன்னொரு வாழையிலேயே போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு மாதம் ஆனால் கூட பூ வாடாமல் இருக்கும்.
இந்த முறையில் பூக்களை வைக்க ஒரு நியூஸ் பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே கட்டிய பூக்களை வைத்து பண்டல் போல சுருட்டி அதை சில்வர் பாக்ஸில் வைத்து அப்படியே மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். நியூஸ் பேப்பர் கிடைக்காத பட்சத்தில் டிஷ்யூ பேப்பரை கூட இதற்கு பயன்படுத்தலாம். இப்படி வைத்தாலும் பூக்கள் அதிக நாட்கள் வாடாமல் இருக்கும்.
இப்போது ஃப்ரிட்ஜ் இல்லாமல் வெளியே வைத்து ஸ்டோர் செய்தாலும், பூ வாடாமல் இருக்க என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்பொழுதெல்லாம் கடைகளில் பிளாஸ்டிக் பைக்கு பதிலாக துணிப்பை அதிகம் தருகிறார்கள். அந்தப் பையை நல்ல ஈரமாக்கி பிழிந்து அதில் பூக்களை வைத்து மடித்து அதை சில்வர் பாக்ஸில் போட்டு வைத்தால் பூ வாடாமல் இருக்கும். இந்தத் துணிப்பையை மட்டும் ஈரம் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிய பிறகு அதன் மேல் வாழையிலேயே வைத்து விடுங்கள். அதன் பிறகு வாழை இலை மேல் நீங்கள் கட்டிய பூக்களை பண்டலாக சுருட்டி வைத்து, அதன் மேல் அந்த துணிப்பை நனைத்து பிழிந்து மேலே போட்டு விடுங்கள்.
இந்த முறையிலும் துணிப்பை ஈரத்துடன் தான் இருக்க வேண்டும் ஈரம் காய்ந்து விட்டால் அடிக்கடி அதை தண்ணீர் தெளித்து ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த முறையில் வைத்தாலும் பூக்கள் அதிக நாள் வாடாமல் இருக்கும் இப்படி வைக்கும் போது ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை.
இதையும் படிக்கலாமே: இனி கூலிங்கே ஆகாதுன்னு முடிவு பண்ண உங்க பழைய பிரிட்ஜை கூட, ரொம்ப சுலபமா செலவே இல்லாம சூப்பரா ஓட வெச்சிடலாம். என்னங்க ஆச்சரியமா இருக்கா! வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களை நாம் எப்போதுமே அதிகமாக தான் வாங்கி வைத்து விடுவோம். ஏனென்றால் தினமும் வாங்கி வைக்க முடியாது. அப்படி வாங்கும் பூக்களை கூட இது போன்று முறையில் எடுத்து வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் புதிதாக வாங்கிய மலர்களைப் போலவே பிரஷ்ஷாக இருக்கும் இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.