என்னதான் காய்கறிகளை பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்தால் கூட, இந்த வெயில் காலத்தில் காய்கறிகள் வாடின போல மாறிவிடும். குளிர் காலத்தில் காய்கறிகள் பிரஷ்ஷாக இருப்பது போலவே இந்த வெயில் காலத்திலும் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்யலாம். எல்லா வகையான காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் முறையாக எப்படி ஸ்டோர் செய்து வைப்பது என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்புகள் இதோ உங்களுக்காக. சுருங்கி போன, காய்ந்துபோன, கேரட்டை கூட பிரஷ்ஷாக இப்போதுதான் பறித்த கேரட் போல மாற்றுவதற்கு ஒரு சூப்பர் குறிப்பு இந்த பதிவில் இறுதியில்.
தேங்காயை இரண்டாக உடைத்து விட்டு, அதிலிருந்து சிறிது மட்டும் பத்தை போட்டு எடுத்துக் கொண்டு, மீதம் தேங்காய் மூடியை அப்படியே பிரிட்ஜில் வைத்தால், அது ஒரே நாளில் டிரையாக மாறிவிடும். உடைத்த தேங்காய் மூடிக்கு, உள்ளே இருக்கும் தேங்காயில் தேங்காய் எண்ணெயை தடவி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வையுங்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் தேங்காய் இப்போதுதான் உடைத்த தேங்காய் போல பிரஷ்ஷாக இருக்கும்.
பீன்ஸ், கொத்தவரங்காய், காராமணி, அவரைக்காய், போன்ற இப்படிப்பட்ட பீன்ஸ் வகை காய்களை எல்லாம் வாங்கி வந்த உடனேயே இரண்டு பக்கம் இருக்கும் காம்பை நீக்கிவிட்டு, கூடவே சேர்ந்து வரும் நாரையும் நீக்கிவிட்டு ஸ்டோர் செய்ய வேண்டும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கீழே ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு, மேலே இந்த பீன்ஸ் வகைகளை வைத்து, மீண்டும் மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு ஏர் டைட்டாக மூடி போட்டு வைத்தால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாது. (நீளமாக இருக்கும் பீன்ஸை மூன்று அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி ஸ்டோர் செய்யலாம்).
முட்டைக்கோஸ், குடைமிளகாய், பெரிய கத்திரிக்காய், வாழைத்தண்டு இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் கிளாஸ் ரேப்பர்(பேப்பரில்) சுற்றி வைக்க வேண்டும். மெலிசாக ஒரு கவர் இருக்கும் அல்லவா. வரிசை தட்டுக்கு மேலே கூட சுற்றுவார்கள் பாருங்கள் அந்த கவர். அது கடைகளில் கிடைக்கின்றது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த கவரை இந்த காய்கறிகளின் மேல் வைத்து இறுக்கமாக சுற்றி பிரிட்ஜில் வைத்தால் காய்கறிகள் எப்போதுமே பிரஷ்ஷாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வைத்திருக்கும் கூடையில் ஒரு ஆப்பிளை போட்டு வையுங்கள் உருளைக்கிழங்கு சீக்கிரம் முளைக்காது.
இந்த வெயில் காலத்திற்கு வெள்ளரிக்காய் வாங்கினால் அதை ஒரு டிஷ்யூ பேப்பரில் நன்றாக சுற்றி, ஜிப் லாக் கவரில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். எலுமிச்சம் பழம் வாங்கினால் அதை அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க. ஒரு டப்பாவுக்கு கீழை டிஷ்யூ பேப்பரை போட்டு, அதன் மேலே எலுமிச்சம் பழத்தை வைத்து, மீண்டும் அதன் மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு காற்று புகாமல் மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாது.
இது தவிர மற்ற காய்கறிகள் எது வாங்கினாலும் சரி, அதை காம்பு பகுதியை நீக்கிவிட்டு ஒரு ஜிப்லாக் கவரில் போட்டு வைக்க வேண்டும். உதாரணத்திற்கு முள்ளங்கி, பீட்ரூட், கேரட் இப்படிப்பட்ட காய்கறிகள் வாங்கியவுடன் மேலே இருக்கும் காம்பை நறுக்கி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சமையலறையில் மறந்தும் கூட வைக்க கூடாத 4 பொருட்கள் என்னென்ன? இதெல்லாம் இருந்தால் உடனே மாத்திடுங்க தரித்திரம் பிடிக்கும்!
இறுதியாக காய்ந்துபோன கேரட்டை என்ன செய்வது என்று பார்த்து விடுவோம். நம்முடைய வீட்டு பிரிட்ஜில் கேரட்டை வாங்கி வைத்து மறந்து விடுவோம். அது அப்படியே வதங்கி போய் வெட்ட கூட முடியாமல் போய்விடும். ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை ஊற்றி, அதில் வதங்கிய கேரட்டை போட்டு மூடி போட்டு அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் அந்த கேரட்டை எடுத்து பார்த்தால் இப்போது தான் பிரஷ்ஷாக வாங்கிய கேரட் போல சூப்பராக உயிர் பெற்று இருக்கும். பிறகு சமைத்துக் கொள்ளலாம். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.