இந்த கலியுகத்தில் நிறைய பேருடைய ஜாதக கட்டத்தில் பித்ரு சாபம் இருப்பதாக, பித்ரு தோஷம் இருப்பதாக, ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது. பித்ரு சாபம், பித்ரு தோஷம் இருந்தால் குடும்பத்தில் கஷ்டம் வரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த பித்ரு சாபம் ஒரு குடும்பத்திற்கு எப்படி ஏற்படுகின்றது. பித்ரு சாபத்திலிருந்து நம் குடும்பத்தையும், நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறைகளையும் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பித்ரு சாபம் எதனால் ஏற்படுகிறது:
நம்முடைய குடும்பத்தில் இறந்தவர்களின் ஆத்மா ஏதாவது ஒரு காரணத்தினால், சாந்தி அடையாமல் பித்ருலோகத்தை போய் சேராமல் பூமியிலேயே உலாவிக் கொண்டிருந்தால், அதன் மூலம் நம்முடைய குடும்பத்திற்கு பித்ரு தோஷம் ஏற்படும். ஒரு ஆத்மாவானது சாந்தி அடைய எத்தனை வருடங்கள் வேண்டும் என்றாலும் எடுக்கலாம். நாம் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய இறுதி காரியங்களை சரியான வழியில் செய்து விட்டால், அவர்கள் பித்ருலோகத்தை சுலபமாக அடைந்து விடுவார்கள். அது மட்டுமல்ல அவர்கள் உயிரோடு இருக்கும்போது நாம் செய்யக்கூடிய தவறுகளும் பித்ரு சாபம் ஏற்பட காரணமாக இருக்கும்.
நம்முடைய குடும்பத்தில் இறக்கும் தருணத்தில் இருப்பவர்கள் மனதில், ஏதேனும் நிறைவேறாத ஆசை இருந்தாலும் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாது. உதாரணத்திற்கு இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் பெற்றவர்களோடு கடைசி காலத்தில் இருக்கிறார்களா, என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. இங்கே நம்முடைய நாட்டில் பெற்றவர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் என்னதான் பணத்தை சம்பாதித்து பெற்றவர்களுக்கு அனுப்பி வைத்தாலும் சரி, பிள்ளைகள் நம்முடன் இல்லையே என்ற ஒரு ஏக்கம் அவர்களுடைய மனதில் கட்டாயம் இருக்கும். சில பேர் முதியோர் இல்லத்தில் பெற்றவர்களை விட்டு விடுகிறார்கள்.
வயதான காலத்தில் பிள்ளைகள் நம்முடன் இல்லையே, அவர்களை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தோடு பெற்றவர்களின் உயிர் பிரிந்தால், நிச்சயமாக அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாது. இதுவும் ஒரு வகையில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஏற்பட காரணமாகத்தான் இருக்கின்றது. பிள்ளைகள் பாவம், அறிந்தே இந்த தவறை செய்வது இல்லை. அவர்களுடைய சூழ்நிலை. அவர்கள் பெற்றவர்களை பிரிந்து இருக்க வேண்டிய நிலைமை. இருப்பினும் இந்த தவறு உங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினரை பாதிப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
பசு மாடுகளை வதைப்பது, பெண்களுக்கு துரோகம் செய்வது, பெற்றவர்களை தவிக்க விடுவது, இறந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை சரியாக செய்யாமல் இருந்தால் பித்ரு தோஷங்கள் வரும். சரி நம்முடைய குடும்பத்திற்கு பித்ரு தோஷம் எந்த வகையில் பாதிப்புகளை உண்டாக்கும். வீட்டில் கடன் சுமை இருக்கும். தீராத வியாதி இருக்கும். அகால மரணம் ஏற்படும். சிறு வயதிலேயே பிள்ளைகள் இறந்து விடுவார்கள். இப்படி பல வகைப்பட்ட பிரச்சனைகளை கொடுக்கக் கூடியது தான் இந்த பித்ரு தோஷம்.
இந்த பித்ரு சாபத்திலிருந்து விடுபட என்ன தான் வழி:
பித்ரு தோஷத்திலிருந்து தப்பிக்க செலவே இல்லாத ஒரு வழி என்ன தெரியுமா. அவரவருடைய கடமைகளை சரியாக செய்ய வேண்டும். நம்முடைய கடமையிலிருந்து தவிறி, வெறும் பணம் பணம் என்று சொல்லி பணத்திற்காக ஓடி ஓடி அலைந்து திரிந்து கடமைகளை சரிவர செய்யாதவர்களுடைய தலைமுறைக்கு நிச்சயமாக பித்ரு சாபம் தொடரத்தான் செய்யும்.
உங்களுடைய கடமைகளை சரிவர செய்யுங்கள். உங்களுடைய ஜாதகத்தை நல்ல ஜோதிடர்கள் கொண்டு போய் காண்பியுங்கள். உங்களுடைய ஜாதகத்தில் பித்ரு சாபம் எந்த இடத்தில் எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் சரியாக கனித்து சொல்லி விடுவார்கள். இதையும் தாண்டி ஏதாவது அவர்கள் பரிகாரம் செய்ய சொன்னால் அதை நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் இருக்கும் பித்ரு சாபம் விலகும். குடும்ப கஷ்டம் தீரும். அடுத்தடுத்து தலைமுறைகள் தழைக்கும். மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.