நாம் புதிதாக ஏதாவது ஒரு சைடிஷ் அல்லது கிரேவி வகைகளை இருந்தால் பெரும்பாலும் அது சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு சாப்பிடுவது போல தான் முயற்சி செய்வோம். அந்த வகையில் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் சப்பாத்திக்கு ஏற்ற ஒரு பக்காவான சைடிஷ் ஆக இந்த தக்காளி தயிர் கிரேவியை 10 நிமிஷத்தில் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
செய்முறை
இந்த கிரேவி செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் இரண்டு நல்ல பழுத்த தக்காளியை நீளமாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் நான்கு பச்சை மிளகாய் காம்புடன் அப்படியே சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரை கப் அதிகம் புளிக்காத பிரஷ்ஷான தயிராக சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள்.
இப்போது ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ஒரு பட்டை, மூன்று கிராம்பு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
இந்த வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு நாம் ஏற்கனவே கலந்து வைத்த தக்காளி தயிர் கிரேவியை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
இவையெல்லாம் நன்றாக கலந்து பச்சை வாடை போன பின்பு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் தனியாத் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா தூள், கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள் இவையெல்லாம் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் இந்த மசாலாக்களின் பச்சை வாடையும் போய் விடும். இப்போது இதில் ஒரு முறை உப்பு சரியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் நன்றாக வதங்கி பச்சை வாடை முழுவதுமாக நீங்கிய பிறகு மீண்டும் அரைக் கப் தயிரை ஊற்றி ஒரு முறை கலந்து அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து தட்டு போட்டு ஐந்து நிமிடம் வரை மூடி கொதிக்க வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் எண்ணெய் பிரிந்து நல்ல ஒரு சுவையான கிரேவி சூப்பராக தயாராக இருக்கும். இதன் மேல் லேசாக கொத்தமல்லி தழைகளை தூவி அப்படியே சப்பாத்திக்கு பரிமாறலாம்.
இதையும் படிக்கலாமே: ரொம்ப ரொம்ப ஈஸியா டக்குனு கார சட்னியை இப்படியும் செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட நாஊரும் சுவையில் மதுரை கார சட்னி ஸ்பெஷல்.
நார்த் இந்தியன் ஸ்டைலில் செய்யப்படும் இந்த கிரேவியை செய்தால் நீங்கள் எத்தனை சப்பாத்தி செய்தாலும் பத்தாது. அந்த அளவிற்கு இதன் சுவை சாப்பிடுபவர்களை இன்னும் சாப்பிட தூண்டிக் கொண்டே இருக்கும். நீங்க இந்த சிம்பிள் கிரேவியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க .