ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடிக்கும் போது, கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடலாம் என்று தோன்றினால், உடனடியாக ஹோட்டலுக்கு போய் விடுவோம். அதுவே ஹோட்டல் ஸ்டைலில் நம்முடைய வீட்டிலேயே சப்பாத்தி, நாண், ஃபுல்கா செய்து, அதற்கு சைடிஷ் ஆக இப்படி ஒரு எக் கிரேவியை செய்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும். சண்டே மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்ல ஐந்து முட்டை இருந்தால், இந்த ஹைதராபாத் முட்டை கிரேவி தயாராகி விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம். முக்கியமா இந்த கிரேவிக்கு நாம தக்காளி போடப்போவது கிடையாது. வாங்க அந்த ரெசிபி முழுமையாக படித்து நாமும் தெரிந்து கொள்வோம்.
செய்முறை
முதலில் ஐந்து முட்டையை தண்ணீரில் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு எப்போதும் போல வேக வைத்து தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக இந்த முட்டை கிரேவிக்கு ஒரு மசாலாவை அரைக்க வேண்டும். மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் பெரிய வெங்காயம் நறுக்கியது 2, பச்சை மிளகாய் 10, புதினா தழை 1 கைப்பிடி அளவு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். (ஐந்து முட்டைக்கு கால் கிலோ வெங்காயம் எடுத்தால் சரியாக இருக்கும்.) தண்ணீர் ஊற்றாமலே இது விழுதாக அரைபடும். வெங்காயத்தில் இருக்கும் தண்ணீரை போதுமானது. இப்போது அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.
அடுத்து கிரேவியை தாளிக்க போகலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அடுப்பை முழுமையாக சிம்மில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான். கிரேவி தயாராகும் வரை கேஸ் சிம்மில் தான் இருக்க வேண்டும். இப்போது மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அந்த விழுதை, கடாயில் சூடான எண்ணெயில் ஊற்றி கலந்து விட வேண்டும். ஐந்து நிமிடம் இந்த அரவை எண்ணெயிலேயே நன்றாக வதங்கட்டும். அடுப்பு சிம்மில் இருக்கட்டும்.
அடுத்து ஐந்து நிமிடங்கள் கழித்து உப்பு 1/2 ஸ்பூன், சீரகத்தூள் 1/2 டேபிள்ஸ்பூன், தனியா தூள் 1/2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், இந்த மசாலா பொருட்களை எல்லாம் போட்டு ஒரு முறை கலந்து விட்டு மிகப் பொடியாக நறுக்கிய மல்லித்தழை 1/2 கைப்பிடி அளவு போட்டு கலந்து விடுங்கள். (இந்த கிரேவிக்கும் மிளகாய் தூள் சேர்க்கக்கூடாது பச்சை மிளகாய் காரம் மட்டும் தான்.)
அடுத்து இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன், போட்டு பச்சை வாடை போக மீண்டும் வதக்க வேண்டும். அடுத்தபடியாக தயிர் 100ml ஊற்றி ஒரு நிமிடம் போல கலந்து விடுங்கள். அடுத்து காய்ச்சி ஆர வைத்த பால் 200ml இதில் ஊற்றி கலக்க வேண்டும். (இந்த பாலுக்கு பதிலாக உங்களுடைய வீட்டில் பிரஸ் கிரீம் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் கூடுதல் ருசி தரும்.)
அடுப்பு இப்போது சிம்மில் தான் உள்ளது. இனிமேவும் சிம்மில் தான் இருக்க வேண்டும். பத்து நிமிடம் பால் ஊற்றிய பிறகு இந்த கிரேவி கொதிக்கட்டும். ஒரு தட்டு போட்டு அதை அப்படியே விட்டுடுங்க. தேவைப்பட்டால் இடையிடையே மூடியை திறந்து கொஞ்சம் கலந்து விடுங்க. கிரேவி சூப்பராக எண்ணெய் பிரிந்து ரெடி ஆகி வந்துவிடும். இறுதியாக இதில் வேக வைத்த முட்டையை சேர்க்க வேண்டும்.
வேகவைத்து தோல் உரித்த முட்டையை இரண்டாக வெட்டியும் போடலாம், அல்லது முழுசாகவும் போடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். முட்டையை கிரேவில் போட்டு அடுப்பை அணைத்துவிட்டு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி ஒரு மூடி போட்டு அப்படியே ஐந்து நிமிடம் விட்டுவிடுங்கள். பிறகு அப்படியே சுட சுட முட்டைகள் உடையாமல் எடுத்து பரிமாறினால், ஆஹா இது அல்லவா கிரேவி. சூப்பரா இருக்குங்க. ரெண்டே ரெண்டு சப்பாத்தி இருந்தா போதும் சூப்பரான நிறைவான டிபன் தயார்.