வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த பூஜை பாத்திரங்களை பளபளப்பாக தேய்ப்பது ஒரு சவாலாக இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பூஜை பாத்திரங்களை தேய்க்க நேரமே கிடைக்காது. கிடைக்கின்ற நேரத்தில் பூஜை பாத்திரத்தை பளபளப்பாக தேய்க்க முயற்சி செய்தால் அதுவும் நடக்காது.
பூஜை பாத்திரங்கள் கருத்துப் போய் பாசிப்பிடித்து இருக்கும். கையே தொடாமல், நார் போட்டு தேய்க்காமல், பூஜை பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற ஒரு ஐடியா இருக்கிறது. அந்த பயனுள்ள வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
கைப்படாமல் பூஜை பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற சூப்பரான ஐடியா
இந்த குறிப்புக்கு நாம் கடையில் இருந்து வாங்க வேண்டிய பொருள் லெமன் சால்ட். மிக மிகக் குறைந்த விலையில் சாதாரண மளிகை கடையிலேயே இந்த பொருள் உங்களுக்கு கிடைக்கும். சில ஹோட்டல்களில் எலுமிச்சை பழ சாதம் செய்வதற்கு கூட இந்த லெமன் சால்டை பயன்படுத்துவார்கள்.
அதனால் இதை கையில் தொட்டால் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயப்படாதீங்க. ஒரு அகலமான பாத்திரத்தில் உங்கள் வீட்டு பூஜை பாத்திரம் மூழ்கும் அளவுக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் இந்த லெமன் சால்டை போட்டு நன்றாக கரைத்து விடுங்கள்.
பிறகு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 1 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் பூஜை பாத்திரங்களை முக்கி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவ்வளவுதான். பூஜை பாத்திரங்களை இந்த தண்ணீரில் போடுவதற்கு முன்பு ஒரு துணியை வைத்து அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, விளக்குத்திரி, மஞ்சள் குங்குமம், எல்லாவற்றையும் துடைத்துவிட்டு இந்த தண்ணீரில் போட்டு விடுங்கள்.
ஐந்து நிமிடம் கழித்து இந்த தண்ணீரில் இருந்து பூஜை பாத்திரங்களை வெளியில் எடுத்தாலே, சூப்பராக தங்கம் போல ஜொலி ஜொலிக்கும். பூஜை பாத்திரத்தில் இருக்கும் கருப்பு நிறம் பாசி எல்லாமே நீங்கிவிடும். சில வேலைபாடுகள் உள்ள விளக்குகளில் சின்ன சின்ன இடுக்குகளில் கருப்பு நிறம் அப்படியே படிந்து இருக்கும்.
அந்த இடத்தில் லேசாக நார் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். சாதாரண பாத்திரம் தேய்ப்பது போல தேய்த்து சுத்தமான நல்ல தண்ணீரில் ஒரு முறை கழுவி ஒரு துணியை போட்டு நன்றாக துடைத்து எடுத்தால் 10 நிமிடத்தில் பூஜை பாத்திரங்களை பளிச்சென்று சுத்தம் செய்து விட முடியும்.
உங்கள் வீட்டில் பூஜை பாத்திரங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் பட்சத்தில், கூடுதலாக தண்ணீரும், இன்னொரு ஸ்பூன் லெமன் சால்ட், சேர்த்துக் கொள்ளவும். பித்தளை பாத்திரங்களும் இந்த தண்ணீரில் போடலாம். செம்பு பாத்திரத்தையும் இந்த தண்ணீரில் போடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிக மிக எளிமையான ஐடியா தான்.
இதையும் படிக்கலாமே: பட்டுப் புடவையில் உள்ள கறைகளை நீக்க உதவும் டிப்ஸ்.
தேவைப்படுபவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இதே போல தான் பூஜை பாத்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்ற பயனுள்ள தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால், இதையும் பின்பற்றி பார்க்கலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.