கிராமப்புறங்களில் வேலியோரம் படர்ந்து கிடக்கும் பிரண்டையில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து நம் முன்னோர்கள் அதை முறையாக பயன்படுத்தினார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பிரண்டையை வைத்து எப்படி ஊறுகாய் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
பிரண்டையில் அதிக அளவு கால்சியம் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் இருக்கிறது. இந்த பிரண்டையை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும் . எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் தீர உதவுகிறது. அது மட்டுமல்லாமல் நரம்பு பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக விளங்குகிறது. பசியின்மையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த பிரண்டையை சாப்பிடும் பொழுது பசி அதிகமாக ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
- பிரண்டை – 2 கட்டு
- புளி – 200 கிராம்
- பூண்டு – 200 கிராம்
- வர மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயப் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 400 மில்லி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கைகளில் எண்ணையை நன்றாக தடவிக் கொண்டு பிரண்டையை சுத்தம் செய்ய வேண்டும். பிரண்டையில் இருக்கும் நார்கள் அனைத்தையும் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் 200 மில்லி நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடான பிறகு அதில் உரித்து வைத்திருக்கும் பூண்டை சேர்க்க வேண்டும்.
பூண்டு சிவக்க ஆரம்பித்த உடன் நறுக்கி வைத்திருக்கும் பிரண்டையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிரண்டை நன்றாக வதங்கிய பிறகு அவற்றை எண்ணையில் இருந்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து ஆற வைக்க வேண்டும். அவை நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைக்க வேண்டும். அவ்வாறு அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்றாமல் ஊற வைத்திருந்த புளியை கரைத்து அந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
தேவையான அளவு புளித்தண்ணீரை ஊற்றி மைய அரைக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் நாம் ஏற்கனவே வைத்திருக்கும் எண்ணெயுடன் மீதம் இருக்கும் எண்ணையை ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு சேர்க்க வேண்டும். பிறகு வெந்தய பொடியை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்க்க வேண்டும். அடுத்ததாக பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து மீதம் இருக்கும் புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
இதிலிருந்து எண்ணெய் பிரிந்து தனியாக மிதக்கும் அளவிற்கு அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். எண்ணெய் நன்றாக பிரிந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஊறுகாயை நன்றாக ஆற வைத்து ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: அட்டகாசமான சௌசௌ சட்னி ரெசிபி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்றுதான் பிரண்டை. இந்த பிரண்டையை நாம் ஊறுகாயாக செய்து தரும்பொழுது யாரும் அதை வேண்டாம் என்று ஒதுக்காமல் எளிதாக சாப்பிட்டு விடுவார்கள்.