இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக செய்யப்படும் சட்னிகளில் பலவகை உண்டு. இந்த சமையல் குறிப்பு பதிவில் வித்தியாசமான சுவையில் ஒரு சட்னியை எப்படி செய்வது பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த சட்னியின் சுவைக்கு காரணம் அதில் சேர்க்கும் இந்த காய் தான். ஆமாங்க இந்த சட்னியை நாம சௌசௌ வெச்சி தான் செய்யப் போறோம்.
பெரும்பாலும் இந்த காயை யாரும் அவ்ளவாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை இப்படி சட்னி அரைத்து கொடுத்துப் பாருங்கள் இதை சௌசௌவில் அரைத்த சட்னி தான் என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கும். வாங்க இப்ப அந்த சட்னியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் – 5,
பூண்டு பல் – 5,
மீடியம் சைஸ் வெங்காயம் – 1,
மீடியம் சைஸ் தக்காளி – 1,
கருவேப்பிலை – கொஞ்சம்,
சௌசௌ – 1,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
உப்பு – 1/2 ஸ்பூன்,
கடுகு – 1ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இந்த சட்னி செய்ய முதலில் சௌசௌவின் மேல் இருக்கும் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய் மட்டும் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.
அதன் பிறகு அதில் பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் ஓரளவிற்கு நிறம் மாறி வந்த பிறகு தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்குங்கள். தக்காளி நன்றாக குழைந்த பிறகு அரிந்து வைத்த காயை சேர்த்து வதக்கிய பிறகு புளி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை அப்படியே மூடி போட்டு வேக விடுங்கள்.
செளசெள வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதையெல்லாம் ஒரு தட்டில் கொட்டி ஆற விடுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இவையெல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பைன் பேஸ்ட்டாக அரைத்து ஒரு பவுலில் மாற்றி ஊற்றிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: அட்டகாசமான முட்டை அடை ரெசிபி
அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து நிறம் மாறியவுடன் கொஞ்சம் கருவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பிறகு தாளிப்பை சட்னியில் சேர்த்து கலந்து விட்டால் அருமையான சௌசௌ சட்னி தயார்.