மழை மற்றும் குளிர் காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்படுத்தக்கூடிய ஒன்றுதான் சளி தொந்தரவு. சளி மற்றும் வறட்டு இருமல் காரணமாக பலரும் அவதிப்படுவார்கள். மேலும் காய்ச்சல் பிரச்சனையும் ஏற்படும். இந்த நேரங்களில் வருமுன் காப்போம் என்பதற்கு இணங்க வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ கபத்தை நீக்கக்கூடிய ஆற்றல் பெற்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும். அப்படி கபத்தை குறைக்கக்கூடிய ஒன்றாக தான் வெற்றிலை திகழ்கிறது. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் வெற்றிலையை வைத்து எப்படி துவையல் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் மதிய உணவு வேளையில் வெற்றிலையை உணவிற்கு பிறகு சாப்பிடுவார்கள். இதன் மூலம் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதில் அதிக அளவு கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கும் பற்களுக்கும் பாதுகாப்பை தருகிறது. மேலும் கபத்தை குறைக்கவும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து காத்துக் கொள்ளவும் வெற்றிலை உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றலும் இந்த வெற்றிலைக்கு இருப்பதால் அனைவரும் கண்டிப்பான முறையில் வெற்றிலையை ஏதாவது ஒரு ரூபத்தில் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மையை தரும்.
தேவையான பொருட்கள்
- வெற்றிலை – 10
- தக்காளி – 5
- புளி – நெல்லிக்காய் அளவு
- மிளகு – 15
- வெந்தயம் – 1/4 ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
- தனியா – 2 ஸ்பூன்
- உளுந்து – 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 8
- கட்டி பெருங்காயம் – சிறிது
- எள் – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – 3 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம், கடலைப்பருப்பு, தனியா, உளுந்து, காய்ந்த மிளகாய், கட்டிப் பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். உளுந்து லேசாக நிறம் மாறியதும் அதில் எள், மிளகு இவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு அதை அப்படியே தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஆற வைக்க வேண்டும். அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புளி இவை இரண்டையும் நன்றாக வதக்க வேண்டும். தக்காளி கரையும் அளவிற்கு வதக்க வேண்டும். அந்த நேரத்தில் வெற்றிலையை எடுத்து அதன் நடுவில் இருக்கக்கூடிய நரம்பை நீக்கி சிறிது சிறிதாக கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக வெந்து கரைந்த பிறகு எடுத்து வைத்திருக்கும் வெற்றிலையை அதில் சேர்த்து நன்றாக சுருள கிண்ட வேண்டும்.
வெற்றிலை நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து நாம் ஏற்கனவே வறுத்து ஆற வைத்திருந்த பொருட்களை அதில் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி வெற்றிலையை அரைத்து வைத்த அந்த பொடியுடன் சேர்த்து சிறிது அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
விருப்பப்பட்டவர்கள் இதில் கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த இந்த துவையலை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் இவற்றை போட்டு தாளித்து துவையலில் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும். மிகவும் அருமையான வெற்றிலை துவையல் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: புரோட்டின் சத்து மிகுந்த பச்சைப்பயிறு வடை ரெசிபி
பல அற்புத ஆற்றல் கொண்ட வெற்றிலையில் பல அறிய சத்துக்கள் இருக்கிறது என்பதால் தான் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் காலத்தில் தினமும் வெற்றிலையை உணவாக உட்கொண்டனர். இன்றைய காலத்தில் அதை நாம் மறந்து விட்டாலும் இந்த முறையில் துவையல் செய்து கொடுத்து மறைந்த பழக்கத்தை மீட்டுக் கொண்டு வருவோம்.